அதிமுகவிற்கு சாபம் விடும் பி.ஆர்.பாண்டியன்…!

ராம்நாத்திற்கு ஆதரவளிக்கும் அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அதில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அதிமுகவின் அனைத்து அணிகளும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.அதனால் தமிழகம் பாலைவனமாக மாறி வருவதாகவும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும் கூறினார். அதன்காரணமாக குடியரசுத் தலைவர் தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். ராம்நாத்திற்கு ஆதரவளித்துள்ள அதிமுகவை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.