அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார் என்பதை அறிவிக்க முடியாது? : தேர்தல் ஆணையம்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உள்கட்சி குழப்பத்தால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார் என்பது தெரியாத நிலை நீடிப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியையும் வகித்து வந்தார்.கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் அவர் மரணம் அடைந்ததால் அவர் வகித்து வந்த முதல்வர் பதவியிடமும், பொதுச்செயலாளர் பதவியும் காலியானது.முதல் – அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்ற நிலையில் பொதுச்செயலாளர் பதவி மட்டும் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தேர்தல் கமி‌ஷனுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்பதால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டப்பட்டது.அந்த கூட்டத்தில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். டிசம்பர் மாதம் 31-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வந்த அவர் பொதுச்செயலாளராக அதிகாரப் பூர்வமாக பொறுப்பு ஏற்றார். அதற்கான ஆவணங்களிலும் கையெழுத்திட்டார்.சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானது பற்றி தேர்தல் கமி‌ஷனுக்கு அ.தி.மு.க. சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவை முதல்வராக்க ஏற்பாடுகள் நடந்தன.கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி அவர் சட்டசபை அ.தி.மு.க. தலைவராக தேர்வானார். இந்த நிலையில் ஓ.பி.எஸ். எதிர்ப்பு காரணமாக அவரால் பதவி ஏற்பது தாமதம் ஆனது.இந்த நிலையில் பிப்ரவரி 14-ந்தேதி சொத்து குவிப்பு வழக்கில் அவர் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். பெங்களூர் சிறைக்கு செல்வதற்கு முன்பு அவர் கட்சியை வழி நடத்துவதற்காக தனது உறவினர் டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராக ஆக்கி விட்டு சென்றார்.சசிகலா தண்டனை பெற்றதாலும், அவர் இதுவரை அரசியலில் ஈடுபட்டவர் இல்லை என்பதாலும் அவரை ஏற்க ஓ.பி.எஸ். அணியினர் மறுத்தனர். அவருக்கு பதில் வேறு புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தபோது இந்த பிரச்சனை தேர்தல் கமி‌ஷனிடம் சென்றது. இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் கமி‌ஷன் அந்த சின்னம் யாருக்கு வழங்கப்படும் என்பதை விசாரித்து கூறுவதாக அறிவித்தது. அதோடு சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானது செல்லுமா? என்பதையும் விசாரித்து அறிவிக்கப்படும் என்று கூறியது.இந்த நிலையில் தலைமை தேர்தல் கமி‌ஷனிடம் காசிநாதன் கல்யாணசுந்தரம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ஒரு கேள்வியை கேட்டு இருந்தார். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக யாரை அங்கீகரித்து இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு இருந்தார்.அதற்கு தலைமை தேர்தல் கமி‌ஷன் இன்று பதில் அளித்துள்ளது. அதில், “அ.தி.மு.க.வில் தற்போதும் உள்கட்சி பூசல் தொடர்ந்து நீடித்தப்படி நிலுவையில் உள்ளது. எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார் என்பதை தேர்தல் கமி‌ஷன் இன்னும் முடிவு செய்யவில்லை” என்று கூறியுள்ளது.தேர்தல் கமி‌ஷனின் இந்த பதில் சசிகலாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அ.தி.மு.க. அம்மா அணியினர் சசிகலாதான் பொதுச்செயலாளர் என்று நம்பி கொண்டு இருக்கிறார்கள்.மீண்டும் இடைத்தேர்தல் வரும்போதும் மற்றும் கட்சி நடவடிக்கைகளிலும் சட்ட ரீதியாக சசிகலாவின் தேர்வு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதினார்கள். ஆனால் தேர்தல் கமி‌ஷனின் கருத்து காரணமாக சசிகலா பொதுச்செயலாளராக நீடிக்க முடியுமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வக்கீல் மனோஜ்பாண்டியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-அ.தி.மு.க. சட்ட விதிப்படி பொதுச்செயலாளரை கட்சித் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் சசிகலா தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே அவரது நியமனம் செல்லாது என்று நான் தேர்தல் கமி‌ஷனில் ஏற்கனவே இதுபற்றி வழக்கு தொடர்ந்திருந்தேன்.அந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்து விட்டது. இதன் மீது தேர்தல் கமி‌ஷன் விரைவில் முடிவை அறிவிக்கும்.எனவே சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக்கொண்டார்களா? இல்லையா? என்பதே இன்னும் முடிவாகவில்லை.தேர்தல் கமி‌ஷன் இணையதளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பெயர் இன்னும் இடம் பெறவில்லை. இது தான் உண்மை.இதுபற்றி அ.தி.மு.க. அம்மா அணி வக்கீல் செந்திலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களை விசாரிக்க தேர்தல் கமி‌ஷனுக்கு அதிகாரம் கிடையாது. கட்சி சின்னம் தொடர்பாகத்தான் அவர்களால் முடிவெடுக்க முடியும். கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும்.அதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை பொதுக்குழு தேர்ந்தெடுத்தது. அந்த நகலை தேர்தல் கமி‌ஷனில் சமர்ப்பித்துள்ளோம்.ஒவ்வொரு கட்சியின் தேர்தல் முடிவுகளை வாங்கி பதிவு செய்வதுதான் தேர்தல் கமி‌ஷனின் பணியாகும்.எனவே ஒரு கட்சிக்கு பொதுச்செயலாளர் யார் என்பதை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்து அறிவிக்க முடியாது.என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *