ஆர்கே நகர் பணப்பட்டுவாடா – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Comments (0) அரசியல், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கில் தொடர்புடையவர்களை வருமான வரித்துறை பெயர் குறிப்பிட்டு தெரிவித்தும் முதல் தகவல் அறிக்கையில் பெயர்கள் குறிப்பிடப்படாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகார்களின் பேரில் ரத்து செய்யப்பட்டது.இது தொடர்பாக வைரக்கண்ணு என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.இது தொடர்பான புகார்கள் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்யுமாறு கடந்த திங்கட்கிழமை தேர்தல் ஆணையத்துக்கும் சென்னை காவல்துறை ஆணையருக்கும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் வெள்ளிகிழமை தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வருமானவரித்துறை ஆய்வுகள், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து தமிழக அரசிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறை 3 பெயர்களையும், தொலைபேசி எண்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், எனினும் முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடாதது ஏன்? என்றும் குற்றவாளி என்ற பிரிவு நிரப்பப்படாமல் உள்ளது ஏன் ? என்றும் கேள்வி எழுப்பினர்.இது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் தேவை என்று அரசு வழக்கறிஞர் கோரினார். இதையடுத்து இந்த வழக்கில் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *