ஆறு இயக்குநர்கள், ஒரு படம்!

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குநர்கள் இயக்கும் சில குறும்படங்களை ஒன்றிணைத்து, முழு திரைப்படமாக உருவாக்கும் ‘அந்தாலஜி’ (Anthology film) வகையைச்சேர்ந்த பல திரைப்படங்கள் உலக அளவில் வெளிவந்துள்ளன. இதில் இடம்பெறும் குறும்படங்களுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது. அடிப்படையான ஒரு கருத்தை வலியுறுத்தி தயாரிக்கப்படும் இந்த குறும்படங்கள் தன்னளவில் தொடக்கம், முடிவு கொண்டு இயங்கி தனித்தனி குறும்படங்களாகவே இருக்கும். ஆனால் இந்த தொகுக்கப்பட்ட குறும்படங்கள் முழுநீள திரைப்பட பிரிவின் கீழ் தான் இடம்பெறுகிறது. 2007ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நாலு பெண்கள்’ திரைப்படம் இந்த வகையைச் சார்ந்ததே. பெண்களை மையமாக வைத்து தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய நான்கு வெவ்வேறு கதைகளை அடூர் கோபாலகிருஷ்ணன் நான்கு குறும்படங்களாக இயக்கி அந்தாலஜி வகை திரைப்படமாக உருவாக்கியிருப்பார். இந்த திரைப்படம் அந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை அவருக்குப் பெற்றுத் தந்தது.தமிழில் உருவாகும் அந்தாலஜி வகை திரைப்படமான ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குநருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். மேலும் படத்தின் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். மற்றொரு அத்தியாயத்தை எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார். இவர் மனிதன், சென்னையில் ஒருநாள், வனயுத்தம், வனமகன் ஆகிய படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது இதில் ஒர் அத்தியாயத்தை எழுதி, இயக்குவதன் மூலம் முதல் முறையாய் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோர் மற்ற நான்கு அத்தியாயங்களை இயக்கியுள்ளார்கள்.ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர். தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர். இப்படத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு முயற்சித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *