எட்டு மசோதாக்கள் தாக்கல்:-எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நீட் தேர்வு விவகாரத்தில் அமைச்சர் விஜய பாஸ்கரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று 8 மசோதாக்களைச் சட்டசபையில் தாக்கல் செய்தார்.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தொடர்பான மானிய கோரிக்கைமீது விவாதம் நடைபெற்றது. அதற்கு அமைச்சர் ராஜலட்சுமி பதில் தெரிவித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக இன்று காலை கேள்வி நேரத்தின்போது, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசுகையில், மதராஸ் மாநிலம் என்ற பெயரை 1967-ஆம் ஆண்டு இதே நாளில்தான் அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றினார். இன்று அதன் பொன்விழா ஆண்டாகும். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு பெரும் பிரச்னையாக உள்ளது. தமிழக அரசு தகுந்த முயற்சி எடுத்து அழுத்தம் கொடுத்து இருந்தால் நீட் தேர்வை தவிர்த்து இருக்கலாம். தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 4,675 பேர்தான். ஆனால் மாநில பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்கள் 8,84031 பேர். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்ககோரி இதே சட்டமன்றத்தில் 1-2-2017 அன்று 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அது மத்திய அரசு அலுவலகங்களிலேயே முடங்கிப் போய் விட்டது.ஆனால், இன்று வரை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அந்தத் தீர்மானம் செல்லவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலைப் பயன்படுத்தி உரிய அழுத்தம் கொடுத்திருந்தால் தடை பெற்று இருக்கலாம். ஆனால் மாநில அரசு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை. இதனால் தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் துரோகம் செய்து விட்டன. அடுத்து குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வருகிறது. இதிலாவது முழு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு தடை பெற வேண்டும் என்று கூறினார்.
ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் தெரிவித்து கூறுகையில், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்த பின்னரே, மாநில அரசு பாடத்திட்டத்தில் கல்வி பயின்றவர்களுக்கு, 85 சதவீத இட ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவீதஇட ஒதுக்கீடு வழங்கியும் தமிழக அரசு ஆணையிட்டது. இதை எதிர்த்து 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. தமிழக அரசும் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாடியுள்ளது. சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மற்றும் மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்கள் விகிதாச்சாரத்தின் அடிப்படையின்படி பார்த்தால் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 5 சதவீதமும், மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 95 சதவீதமும் இடம் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் பிரச்னை எதுவும் வரக்கூடாது என்பதற்காக சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்குக் கூடுதல் இடம் ஒதுக்கினோம். இந்நிலையில், தமிழக அரசுக்கு எதிரான இந்த வழக்கில் வாதாடியது ஒரு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் மனைவியாவார். அரசுக்கு ஆதரவாக யாரும் வாதாடவில்லை.உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து இருக்கிறோம். நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். 2010-ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் நீட் தேர்வு நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது இருந்த திமுக தும்பை விட்டு விட்டது. இப்போது நாம் வாலை பிடித்துக் கொண்டு இருக்கிறோம். சட்ட ரீதியாக நாம் போராடுகிறோம். மத்திய அரசிடமும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று கூறினார். அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், கடந்த 21-12-2010 அன்று மத்திய அரசு நீட் தேர்வு முறையைக் கொண்டு வந்தது. அதை, திமுக சார்பில் உடனடியாக எதிர்த்தோம். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் இந்த நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதோடு, பிரதமருக்கும் கடிதம் எழுதினார். மேலும், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீட் தேர்வுக்கு தடை உத்தரவு பெறப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தோம். திமுக ஆட்சி இருந்த வரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்றார். அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் கூறியதாவது, 2010ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அவர்களுடன் திமுக கூட்டணி வைத்திருந்தபோது தான் நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக-வினர் ஏன் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை. இப்போது எல்லா மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு விட்டன. தமிழகம் மட்டும்தான் அதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.
தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. துரைமுருகன் பேசும்போது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஜனாதிபதி ஒப்புதல் பெற்று வெற்றி கிடைத்தது. ஆனால், அதுபோல் நீட் தேர்வுக்கு ஏன் ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறுவதற்கு முயற்சி எடுக்கவில்லை. எனவே இதற்குப் பொறுப்பேற்று அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார்.முதலமைச்சர் முதல் முறையாகப் பிரதமரை சந்தித்த போதே நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 2-வது முறையும் அவரைச் சந்தித்த போதும் அழுத்தம் கொடுத்தார் அதன் பிறகு தலைமை செயலாளரை அனுப்பி பிரதமரின் தனிச் செயலாளரிடம் இதை வலியுறுத்தினோம் என்று துறை முருகனின் கேள்விக்கு அமைச்சர் பதில் கூறினார். ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழக மக்களின் மிகப்பெரிய எழுச்சி போராட்டமாக இருந்தது. ஆனால், நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. நாம் மட்டும்தான் எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. மாற்றுக் கட்சியில் உள்ளவர்கள் தமிழக அரசை எப்படி எதிர்க்கலாம். அடுத்து என்ன அறிக்கை விடலாம் என்பதை மனதில் வைத்து தான் இந்த அரசைக் குறை சொல்கிறார்கள் என்றும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டார்.இந்நிலையில், அமைச்சர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று குரல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசும்போது, அமைச்சர் இந்த பிரச்னைக்கு தகுந்த விளக்கம் கொடுக்காமல் மற்ற கட்சியினர் போராட்டத்தைத் தேடி அலைவது போன்று பேசி இருக்கிறார். அமைச்சரின் அந்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.அமைச்சர் செங்கோட்டையன்:- அமைச்சர் பேசும்போது யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் குறிப்பிட்டார். நீங்கள் மத்திய அரசிடம் கூட்டணி வைத்தபோதுதான் நீட் தேர்வு வந்தது. அப்போது ஏன் நீங்கள் ராஜிநாமா செய்யவில்லை என்றபோது, திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
சபாநாயகர்:- அமைச்சர் பேசியதும் இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் பேசியதும் இருக்கிறது. எனவே எதையும் நீக்க வேண்டிய அவசியம் இல்லை. மு.க.ஸ்டாலின்:-அமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அது மட்டுமல்ல அமைச்சர் பதில் எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அரசும் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார். அதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும், முஸ்லீம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர். அப்போது, பாரம்பரிய மீனவர்கள், விசைப்படகு மீனவர்களுக்கான கடல் எல்லைகளை வரையறைக்கும் மசோதா,. 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா, தமிழ்நாடு உடற்கல்வியியல், தமிழ்நாடு வேளாண் பல்கலை. துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா மற்றும் நிதி ஒதுக்களிப்பு சட்ட மசோதா உள்பட 8 மசோதாக்களை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.அதையடுத்து, கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு படை வீரர் உயிரிழந்தது தொடர்பான பிரச்னையை திமுக எம்.எல்.ஏ. மாதவரம் சுதர்சனம் எழுப்பினார். தீ விபத்தில் காயம் அடைந்த அரசு ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும் சாதாரண மக்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டினார். அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் தெரிவித்து கூறியதாவது 15.7.2017 அன்று இரவு 11.17 மணியளவில் கண்ணதாசன் நகர், கொடுங்கையூரில் மூடியுள்ள பேக்கரியில் தீ விபத்து ஏற்பட்டுப் பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக ஸ்டேன்லி அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 நோயாளர் ஊர்திகள் மற்றும் தனியார் ஊர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். தீயணைப்போர் ஏகராஜ் தலையில் பலத்த காயம் மற்றும் உடலில் ஏற்பட்ட தீக்காயங்களில் உயிரிழந்தார். அவரது வாரிசுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாயும், கருணைத் தொகை 10 லட்சம் ரூபாயும், என மொத்தம் 13 லட்சம் ரூபாய் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்திருந்த தீயணைப்போர் ராஜதுரை மற்றும் லட்சுமணன் ஆகியோரது உறவினர்களின் வேண்டுகோளின்படி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை மானிய கோரிக்கையின்போது நான் அறிவித்த எதிர்பாரா மருத்துவ நல நிதி மூலம் இவர்களுக்கான மருத்துவ செலவு மேற்கொள்ளப்படும். இதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெளிக்காயங்களுடன் ஜெயபாலன் என்பவர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 17.7.2017 அன்று வீடு திரும்பியுள்ளார். இதே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 11 நபர்கள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டும் மற்றும் 2 நபர்கள் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவரையும் சேர்த்து மொத்தம் 48 பேருக்கு இச்சம்பவத்தில் தீக்காயம் ஏற்பட்டது. இவர்களில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் 5 நபர்கள், தீயணைப்பு படை வீரர்கள் 4 நபர்கள், ஊர்காவல் படை வீரர் ஒருவர் மற்றும் பொது மக்கள் 38 பேர் ஆவர்.
தீக்காயம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முழுமையான உலகத்தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில், தேவையான அனைத்து மருந்துகள், கருவிகள், பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம்சாரா பணியாளர்கள் இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை நிலைக்கு மாறானது. தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உரியச் சிகிச்சை அளிப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று முதல்வர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *