கதிராமங்கலம் பிரச்சினை தொடர்பாக போராட்டக்காரர்கள் சென்னையில் போராட்டம்?-போலீஸ் குவிப்பு

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் சென்னையில் போராட்டம் நடத்த வருவதாக தகவலை தொடர்ந்து, 4 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை எண்ணெய் கிணறுகள் அமைத்தது. இதில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. தற்போது இந்த இடத்தில் புதிய குழாய் களை பதிக்கும் பணியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கதிராமங்கலம், கொடியாலம் பகுதியில் எண்ணெய் குழாய் உடைந்து, கச்சா எண்ணெய் வெளியேறியது.இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து போராட்டம் நடத்தினர். உடனடியாக கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர். எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதியில் தீ வைக்கப்பட்டதால் போராட்டம் மேலும் வலுத்தது. போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இருப்பினும் தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில், போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் சென்னையில் கூடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் நேற்று காலை முதலே தகவல் வேகமாக பரவியது. போராட்டக்காரர்கள் 4 பிரிவாக பிரிந்து சென்னை தலைமை செயலகம், கவர்னர் மாளிகை, தமிழக பா.ஜனதா அலுவலகம், மெரினா கடற்கரை என 4 இடங்களில் போராட்டம் நடத்தப்போவதாகவும் தகவல் வெளியானது. இதனால் சென்னையில் தலைமை செயலகம், கவர்னர் மாளிகை மற்றும் தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா அலுவலகம் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். தலைமைச் செயலகத்தின் 2 நுழைவுவாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டக்காரர்கள் எந்த வழியிலும் தலைமை செயலகத்திற்குள் நுழைந்து விடாதபடி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம் போல், போராட்டக்காரர்கள் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கூடி விடாதபடி போலீசார் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடற்கரையில் நேற்று கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. எனவே பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரைக்கு வந்த வாகனங்களை போலீசார் முழு சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். போராட்டக்காரர்கள் வந்தால் அவர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக மெரினா கடற்கரை, தலைமைச் செயலகம், கிண்டி கவர்னர் மாளிகை அருகில் ஏராளமான போலீஸ் வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் சென்னை நகரம் நேற்று பரபரப்பாகவே காட்சியளித்தது.
போராட்டக்காரர்கள் எப்போது வருவார்கள்? எங்கிருந்து வருவார்கள்? என்று போலீசார் கண்காணித்து கொண்டிருந்தபோதும் நேற்று இரவு 7 மணியை கடந்தும் போராட்டக்காரர்கள் யாரும் வரவில்லை. எனவே போராட்டக்காரர்கள் வருவதாக வெளியான தகவல் வதந்தியாக இருக்குமோ? என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் ஏற்பட்டது. அதேநேரத்தில் தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை, கவர்னர் மாளிகை, தமிழக பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘நடத்த வருவதாக தகவல் கிடைத்து இருக்கிறது. அனுமதியின்றி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்யப் படுவார்கள்’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *