கோவை அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கோவை அருகே வேடப்பட்டி குளத்தில் தன்னார்வக் குழுவினர் சுமார் 2000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.பழங்கால தமிழர்கள் இறந்தவர்களின் உடலை ஒரு பானையில் வைத்து அதனுடன் அவர்களுக்குப் பிடித்தமான உணவு, அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை வைத்து புதைத்துவிடுவர். இந்த தாழிகள் கர்ப்பிணி பெண்ணின் வயிறு போன்ற வடிவத்தில் இருக்கிறது. கருவறையில் தொடங்கும் வாழ்க்கை கருவறையிலேயே முடிகிறது என்பதை உணர்த்தும்விதமாக இறந்தவர்களை தாழிகளில் அடக்கம் செய்யும் முறை இருந்துள்ளது. இந்த முதுமக்கள் தாழி ஆதிச்சநல்லூரில் அகழாய்வின்போது பெரிய அளவில் கண்டெடுக்கப்பட்டன.இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த தமிழக மரபுசார் தன்னார்வலர்கள் குழுவினர் ஒவ்வொரு வாரமும் வரலாற்று தேடல் என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். இந்தக் குழுவில் உள்ளவர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பழங்கால பொருள்களைக் கண்டறிந்து அதை ஆய்வு செய்து வருகின்றனர். இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள், கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள வேடப்பட்டி குளத்தில் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது, மண்ணில் புதைந்திருந்த 15-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.இந்த தன்னார்வ ஆய்வுக்குழுவைச் சேர்ந்த ஆனந்தகுமார் கூறுகையில், “இங்கே சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. ஒரே இடத்தில் 15-க்கும் மேற்பட்ட தாழிகள் இருப்பதால், இந்த இடம் முன்பு சுடுகாடாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் குளம் தூர்வாருவதற்காக பொக்லைன் மூலம் தோண்டியதில் பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் உடைந்து சிதைந்துள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு முறைப்படி தகவல் தெரிவித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.அதேபோல, இந்தக் குளம் தூர்வாரப்பட்டபோது ஒரு பழங்கால மதகு கண்டறியப்பட்டது. அந்த மதகில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. மீன் சின்னம் பாண்டிய மன்னருடையது என்பதால் அது பாண்டியர் கால மதகாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. இந்த நிலையில், இந்த இடத்தில் முதுமக்கள் தாழிகளும் கிடைத்திருக்கின்றன. இதன்மூலம், முதுமக்கள் தாழி பற்றிய ஆய்வுகளை மேலும் விரிவாக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *