சிலிண்டர் மானியம் : தலைவர்கள் கருத்து!

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை ஒரு மாதத்துக்கு 4 ரூபாய் வீதம் குறைத்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுவதும் நீக்க மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இது குறித்த அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜூலை 31 ஆம் தேதி நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.இப்போது, 14.2 கிலோ எடையுள்ள பன்னிரண்டு சமையல் காஸ் சிலிண்டர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானிய விலையில் ஒரு வருடத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. 12-க்கும் மேல் போனால், காஸ் சிலிண்டரை மானியம் இல்லாமல் 564 ரூபாய்க்கு வாங்க வேண்டி வரும். மத்திய அரசின் இந்த அறிவிப்பு சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின்(திமுக செயல்தலைவர்)
“அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் ஒழிக்கப்படும்”, என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் அனைவரும் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று முதலில் அறிவித்து, பிறகு வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று கெடு விதித்து, இப்போது அந்த மானியத்தையும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு எடுத்து இருப்பது, தாய்மார்களை ஏமாற்றி, ஏழை – எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் தலையில் பாறாங்கல்லை தூக்கி வைக்கும் செயல்.
ஏற்கனவே ஜூலை 2016 முதல் மாதந்தோறும் சிலிண்டருக்கு 2 ரூபாய் ஏற்றப்பட்ட விலையை, இனி ஜூலை 2017ல் இருந்து மாதந்தோறும் 4 ரூபாய் விலையை ஏற்றிக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.மக்களுக்கு சேவை செய்யவே ஆட்சிகளே தவிர, மக்களை வதைத்து வாட்டுவதற்காக அல்ல என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உணர வேண்டும்.ஆகவே, சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யும் அநியாயமான முடிவை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், மாதந்தோறும் 4 ரூபாய் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திக் கொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ள அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திர பிரதான் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜி.ராமகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
மக்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள நேரடியான இன்னும் ஒரு தாக்குதலாகும் இது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மக்களை எச்சரித்தது. பா.ஜ.க. ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால் அனைத்துவித மானியங்களையும் ரத்து செய்துவிடும் என்று கூறியிருந்தது. இப்போது மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்த இந்த மூன்றாண்டு காலத்தில் உரம் மானியத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டது. அதேபோன்று ரேசன் மானியத்தை முற்றிலுமாக குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு 50 சதவிகிதம் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே இப்போது மானிய விலையில் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.சமையல் எரிவாயு மானியத்தை கைவிடுவது என்ற இந்த முடிவோடு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களுக்குமான மானியத்தையும் இந்த அரசு கைவிட்டுவிட்டது. அதேசமயம் கார்ப்பரேட்டுகளுக்கும், அந்நிய முதலீட்டாளர்களுக்கும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாயை ஆண்டுதோறும் ஊக்கத் தொகை, வாராக் கடன் வசூலிக்கப்படாத வரி, சொத்து வரி நீக்குதல், கார்ப்பரேட் வரியை குறைத்தல் என்று மிகப்பெரிய அளவுக்கு மானிய மழையையே பொழிந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு அந்நிய மூலதனத்துக்கு ஆதரவான, பெரு முதலாளிகளுக்கு ஆதரவான அரசு என்பதை தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமாக உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.மத்திய அரசின் இந்த மானிய ரத்து அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக இந்த மானிய ரத்து அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்’.
திருநாவுக்கரசர் (காங்கிரஸ் கமிட்டி தலைவர்)
“மார்ச் 2018-க்குள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் முழுவதையும் ரத்து செய்யும்படி பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய பாஜக உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூபாய் 4 உயர்த்தவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் மானிய விலையில் சிலிண்டரை பயன்படுத்தி வருகிற 18.11 கோடி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மே 2014 இல் 110 டாலராக இருந்தது தற்போது 60 டாலருக்குக் கீழே சரிந்துள்ளது. அதேபோல, மே 2014 இல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி ரூபாய் 9.20 ஆக இருந்தது, தற்போது ரூபாய் 21.48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு லிட்டர் டீசலுக்கு கலால் வரி ரூபாய் 3.6 ஆக இருந்தது தற்போது ரூபாய் 17.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியமைந்து இதுவரை சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் கலால் வரியை 13 முறை உயர்த்தியுள்ளது.கடந்த 2014-2015 இல் மத்திய அரசின் கலால் வரி ரூபாய் 2 லட்சத்து 88 ஆயிரத்து 73 கோடியாக இருந்தது. இது தற்போது ரூபாய் 5 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. இப்படி கலால் வரியை உயர்த்தி அரசு கஜானாவை நிரப்புகிற நரேந்திர மோடி அரசுக்கு குடும்ப பெண்கள் எரிபொருளாக பயன்படுத்துகிற சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை அடியோடு ஒழிக்க முற்படுவதை விட மக்கள் விரோத நடவடிக்கை வேறு என்ன இருக்க முடியும் ? மானியங்களை ரத்து செய்ய வேண்டுமென்பது பா.ஜ.க.வின் கொள்கையாக மாறிவிட்டது.மானியத்தை ஒழிப்பது மக்களை ஒழிப்பதற்கு சமமாகும். ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதற்குச் சமமாகும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ரத்து செய்கிற மோடி அரசின் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
திருமாவளவன்( வி.சி.க தலைவர்)
”ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் ஏராளமான புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். பட்டினி சாவுகளுக்கு வழி வகுக்கும். எனவே இந்த விதிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்ரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் நான்கு ரூபாய் உயர்த்துவதென்றும், சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்படுமென்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பாக மத்திய அமைச்சர் இன்று அளித்த விளக்கம் அந்தச் செய்தியை மறுப்பதாக இல்லை. முறைப்படுத்தப் போகிறோம் என அவர் கூறினாலும் படிப்படியாக மானியம் ரத்து செய்யப்படும் என்பதை அவர் மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் , எரிவாயு ஆகியவற்றின் விலை கடந்த மூன்று ஆண்டுகளாகக் குறைவாக உள்ள நிலையில் எரிவாயுவின் விலையை உயர்த்தும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கே வழிவகுக்கும்.மத்தியில் ஆளும் பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசும் இதற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்”.

 • 41ece37c
 • 1492520606
 • TamilDailyNews_1951977014542
 • thiruma_13447_11192_20017
 • vaikoo_0
(பா.ம.க)
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளுக்கான விலை இனி மாதந்தோறும் 4 ரூபாய் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் சமையல் எரிவாயுவுக்கான மானியம் அடியோடு ரத்து செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது..சமையல் எரிவாயு மீதான விலை உயர்வும், மானியம் ரத்தும் ஏழை, எளிய மக்களைக் கடுமையாக பாதிக்கும் என குறிப்பிட்டுள்ள ராமதாஸ், இம்முடிவுகளை உடனடியாக ரத்து செய்து மக்களின் துயரத்தை துடைக்க வேண்டும்.
வைகோ(மதிமுக)
2016 ஜூலை மாதம் முதல் சமையல் எரிவாயு உருளைகள் விலையை 10 முறை உயர்த்திய மோடி அரசு, ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தவுடன், ஜூலை மாதம் ரூ 32 உயர்த்தியது. தற்போது மானியம் ரத்து செய்யப்படுவதால், எரிவாயு விலையாக 564 ரூபாய் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். மாதத்தோறும் 4 ரூபாய் விலை உயர்த்தப்பட்டால், சமையல் எரிவாயு உருளையின் விலை அதிகரிப்பது மட்டுமின்றி, பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டி பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்த்தப்படும்போது, சமையல் எரிவாயு விலையும் உயரும்.சமையல் எரிவாயு விலை ஏற்றத்தால் கோடிக்கணக்கான சாதாரண எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். மத்திய அரசின் மக்கள் விரோத இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.சமையல் எரிவாயு உருளைகள் மானியம் ரத்து, மாதந்தோறும் ரூபாய் 4 விலையேற்றம் உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். பொது விநியோகத் திட்டத்தை சீரழிக்கும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்வது குறித்து எதிர்க்கட்சிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி இன்று மாநிலங்களவையில் கேள்வியெழுப்பினர். இதனால்,அங்கு சிறிது நேரம் அமளி நிலவியது. இதனால், முதலில் பத்து நிமிடங்களும், அதன் பின்னர் 12 மணி வரையிலும் அவையை ஒத்தி வைப்பதாகத் துணை தலைவர் பி.ஜே. குரியன் அறிவித்தார். பின்னர், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த தர்மேந்திர பிரதான் ‘சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது. யாருக்குத் தேவை.,யாருக்குத் தேவையில்லை என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும்’ என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *