திருப்பூர் ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது

Comments (0) Uncategorized

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி பாலக்காடு ரோடு சக்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் கிருஷ்ணகுமார் (வயது 41). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி சரண்யா பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை யாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி கணேஷ் தொழில் விஷயமாக வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில் மனைவிக்கு துணையாக தம்பி சபரீஷ் தங்கி இருந்தார். வழக்கம் போல் சரண்யா பள்ளிக்கு புறப்பட்டு சென்று விட்டார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த சபரீஷ் கதவை பூட்டி பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்து விட்டு வண்ணாமடையில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சரண்யா முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 30 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையில் ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணாகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறினார்கள்.இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று 2 பேரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தியதில், சக்தி கார்டனில் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் அங்கன் அருகே உள்ள சிவராமன் காலனியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் குருவி என்கிற குரு (32), கோட்டூர் கொசுபாறை வீதியை சேர்ந்த சந்திரகுமார் (23) என்பதும் தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், சிறையில் இருக்கும்போது பழக்கம் ஏற்பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *