பதவியேற்றார் ஜனாதிபதி!

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று ஜூலை 25ஆம் தேதி மதியம் பதவியேற்றார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி முடிவடைவதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி சார்பாக ராம்நாத் கோவிந்தும், அவரை எதிர்த்து முன்னாள் சபாநாயகரான மீராகுமாரும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்தார்.ஜனாதிபதி தேர்தலில், ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் , முன்னாள் முதல்வர்கள், அனைத்துக்கட்சித் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.அதையடுத்து, இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்பதற்காக நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலையில் புறப்பட்ட ராம்நாத் கோவிந்த் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு பிரணாப் முகர்ஜியுடன் சென்றார். அவர்கள் இருவரையும் குதிரைப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு முன்புள்ள மைதானத்தில் இருந்து அணிவகுத்து அழைத்துச் சென்றனர்.நாடாளுமன்றத்தில் அவர்களை, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து இன்று மதியம் 12:15 மணியளவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், ராம்நாத் கோவிந்திற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதையடுத்து, பிரணாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்திற்கு வாழ்த்து தெரிவித்து கை குலுக்கினார். ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்ட பின்னர் ஏற்புரையாற்றினார். அதில், தன்னை நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விவசாய நாடான இந்தியாவில், ஆண்களுக்குச் சமமாக பெண்களும் விவசாயம் செய்து வருகின்றனர். சாதாரண குடிமக்களே இந்த நாட்டைச் செதுக்குகிறார்கள். நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் எந்தத் திட்டமானாலும் சிறப்பாகச் செயல்படுத்தவே விரும்புகிறோம் என்று கூறினார். அதைத்தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது.பதவிப் பிரமாண நிகழ்ச்சி முடிந்ததும் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி மாளிகையை ராம்நாத் கோவிந்திற்கு சுற்றிக் காட்டினார். அதைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜியை, ராம்நாத் கோவிந்த் வழியனுப்பி வைத்தார். அதையடுத்து, இன்று முதல் வரும் 5 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் அதிகாரபூர்வமாக தங்குவார்.இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்து மாநில முதல்வர்களும், ஆளுநர்களும் கலந்து கொண்டனர். மேலும், அனைத்து எம்.பி.-க்கள்,கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *