பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மீண்டும் வாய்ப்பு?

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு நேற்று(ஆகஸ்ட்,31) பதில் அளித்துள்ளது.பணமதிப்பழிப்பு நடவடிக்கையாகக் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பொதுமக்களிடையே பண தட்டுப்பாடு ஏற்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் நவம்பர் 24 ஆம் தேதி வரை 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் திருமணங்கள் நின்றது, ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முடங்கின. பழைய ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது என நினைத்து மாரடைப்பால் பலர் உயிரிழந்தனர். அதேபோல், அச்சத்தில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் பழைய நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு வரிசையில் நின்று பலர் உயிரிழந்தனர். போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது.பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், ‘செல்லாது’ என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் 99 % (சுமார் ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி) வங்கிகளுக்குத் திரும்ப வந்துவிட்டதாகவும், 1% நோட்டுகள் மட்டும் திரும்ப வரவில்லை எனவும் பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் (ஆகஸ்ட்,30) அறிவித்தது.அதைத் தொடர்ந்து, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை மாற்றிக்கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா என நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு, ‘பழைய நோட்டுக்களை மாற்றுவதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை’ என மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் எஸ்.சி. கார்க்கி பதிலளித்துள்ளார்.டெல்லியில் நேற்று நடந்த பொருளாதார மாநாடு ஒன்றில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டார். அப்போது அவர், ‘பணமதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர் வங்கிக்கு வந்துள்ள ரூபாய் நோட்டுகள் அவ்வளவும் சட்டப்பூர்வமான பணமாக ஆக்கப்படவில்லை. கருப்புப் பணம் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று யாரும் சொல்லவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.பெரும்பாலான மக்கள் எப்போதோ சேமித்து மறந்துபோன ஒரு சில 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வாய்ப்பளித்தால், அதைப் பயன்படுத்திக்கொள்ளும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *