பிக் பாஸ் நிகழ்ச்சியை கடுமையாகக் கண்டித்துப் பேசிய கமல்

Comments (0) சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உணர்வுகளோடு விளையாடுவதுதான் ‘பிக் பாஸ்’. வெளி உலகத் தொடர்பு இல்லாமல் ஒரு சிலரை ஒரே வீட்டுக்குள் அடைத்துவைத்துக் கண்காணித்தால் அவர்களுடைய நடத்தை, நடை, உடை பாவனை, பேச்சு எல்லாம் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தக்கூடிய நிகழ்ச்சி இது. ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், அதை நடத்துபவர்களுடைய உளவியலும் சமூகநோக்கும்கூட இந்த நிகழ்ச்சியால் அம்பலமாகின்றன என்று சொல்லலாம்.வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு அடிக்கடி ‘டாஸ்க்’ எனப்படும் சில பணிகளும் சவால்களும் கொடுக்கப்படும். நடனம், நடிப்பு, விளையாட்டு எனப் பலவிதமாக இருக்கும் இந்த ‘டாஸ்க்’ கடந்த வாரம் விபரீத வடிவத்தை எடுத்தது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக நடிக்கும்படி வீட்டிலிருப்பவர்கள் சிலர் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அந்தச் சவாலும் அது நடைமுறைப்படுத்தப்பட்ட விதமும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பரிகசித்து இழிவுபடுத்தும் விதத்தில் இருந்தன. சமூக வலைதளங்களில் பலர் இதைக் கண்டு கொந்தளித்தார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை மீறும் செயலாகவும், நவீனத்துவ, நாகரிகச் சிந்தனைக்கு எதிராகவும் அமைந்த இந்தப் போக்கைப் பலரும் கண்டித்தார்கள். நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் கமல்ஹாஸன் இதற்கு என்ன சொல்லப்போகிறார் என்னும் கேள்வியும் எழுந்தது.கடந்த சனிக்கிழமை இந்தக் கேள்விக்குத் திருப்திகரமான பதில் கிடைத்தது. இந்த விளையாட்டின் விபரீதத்தைக் கடுமையாகக் கண்டித்துப் பேசிய கமல், ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பரிகசிப்பதைத் தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என்றார். தன்னுடைய படங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வந்தால் அவர்கள் காமெடியன்களாக அல்லாமல் கதாநாயகர்களாக வருவார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்தப் போக்கைப் பற்றி விரிவாகப் பேசிய அவர், ‘இது தொடர்ந்தால் இந்த நிகழ்ச்சியில் தான் நீடிக்க மாட்டேன்’ என்றும் அழுத்தமாகச் சொன்னார்.மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் ஆகியோரைப் பரிகசித்துக் கேலிப்பொருளாக்குவது தமிழ் சினிமாவுக்கும் பல ஊடகங்களுக்கும் பழக்கமாகவே இருந்துவருகிறது. நவீனத்துவப் பார்வையும் மனிதநேயச் சிந்தனையும் கொண்ட பலர், இந்தப் போக்குக்கு எதிரான கண்டனங்களையும் பார்வைகளையும் முன்வைத்து வருகின்றனர். சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமான மனித உரிமைகள் குறித்த விழிப்பு உணர்வு இன்று பல ஊடகங்களால் முடுக்கப்பட்டு வருகிறது.சமகாலத்தின் முக்கியமான சலனங்களில் ஒன்றான இதுகுறித்த கவனம் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்கள் இதுபோன்ற சவால்களை விளையாடுத்தனமாகக் கொடுப்பதும் பிக் பாஸ் வீட்டினர் நுண்ணுணர்வற்ற முறையில் அதை நடைமுறைப்படுத்துவதும் ஆரோக்கியமானதல்ல.நிகழ்ச்சியின் முகமாக விளங்கும் கமல்ஹாஸன் இதைப் பகிரங்கமாகக் கண்டித்ததுடன் இதுதொடர்ந்தால் தான் விலகுவதாக அறிவித்து இவ்விஷயத்தில் தன்னுடைய உறுதியையும் வெளிப்படுத்தியது பாராட்டத்தக்கது. சமூகத்தில் பலரால் ஆராதிக்கப்படும் ஆளுமைகள் கூறும் கருத்துகளும் அவர்கள் நடத்தையும் பெருவாரியான மக்களுக்கு முன்னுதாரணமாக அமையும். அந்த வகையில் கமலின் இந்தக் கூற்றைக் கை தட்டி வரவேற்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *