மழையால் ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா கூட்டம் 5-ந்தேதி நடக்கும்: மு.க.ஸ்டாலின்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

முரசொலி பவளவிழா கூட்டம் செப்டம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்தது. தென்சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்துக்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர்.மாலையிலேயே கருமேகங்கள் திரண்டிருந்தன. நேரம் செல்ல செல்ல மேகம் இருண்டு விழா தொடங்குவதற்கு முன்பே மழை கொட்ட தொடங்கியது. சிறிது நேரத்தில் ஓய்ந்து விடும் என்று தொண்டர்களும் நனைந்தபடியே இருந்தனர்.ஆனால் மழை இடைவிடாமல் வெளுத்து கட்டியது. திறந்தவெளி மேடை என்பதால் மேடையில் இருந்த மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தலைவர்களும் நனைந்தனர். குடை பிடித்தும் முடியவில்லை. இருந்தாலும் மழையில் நனைந்தபடியே விழாவை தொடங்கினார்கள். துரைமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.முரசொலி பவளவிழா மலரை இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு வெளியிட பத்திரிகையின் முதல் மேலாளர் சி.டி. தட்சிணாமூர்த்தி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.மழையில் நனைந்தவாறே தலைவர்கள் ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, மழையை போலவே கைமாறு கருதாமல் திராவிட இயக்கமும், முரசொலியும் பணியாற்றும். திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கு அடையாளமாக இந்த விழா நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார்.கூட்டத்தில் கலந்து கொண்ட கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், டி.கே.ரங்கராஜன், முத்தரசன், திருமாவளவன், காதர்மொய்தீன், ஜவாஹருல்லா, பேராயர் எஸ்றா சற்குணம், எர்ணாவூர் நாராயணன், என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட விழாவில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து கனமழை கொட்டி கொண்டிருந்ததால் கூட்டத்தை நடத்த முடியாத நிலை உருவானது.இதையடுத்து மு.க. ஸ்டாலின் பேசும்போது, மழையின் காரணமாக பவளவிழா பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. மிகப்பெரிய அளவில் மீண்டும் பவளவிழா பொதுக் கூட்டம் நடத்தப்படும்.மழையையும் பொருட்படுத்தாமல் திரண்டிருக்கும் தொண்டர்களுக்கும், விழாவுக்கு வந்துள்ள தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பிரமாண்டமாக தொடங்கிய கூட்டம் மழை செய்த இடையூறால் 30 நிமிடங்களியே முடிந்தது. இதற்கிடையே மழையால் ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா கூட்டம் செப்டம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின்அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *