ராஜீவ் கொலை வழக்கு: பரோல் மனு தள்ளுபடி!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுமுறை வழங்கக் கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை இன்று ஆகஸ்ட் 2ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ரவிச்சந்திரனும் ஒருவர். இவர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருந்துவருகிறார்.இந்நிலையில், ரவிச்சந்திரனின் தாயாரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டயைச் சேர்ந்த ராஜேஸ்வரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கக் கோரி மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில், எனது மகன் ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த 26 ஆண்டுகளில் அவருக்கு 3 முறை மட்டுமே பரோல் விடுமுறை வழங்கப்பட்டது. அதாவது எங்கள் குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காக 2012-ம் ஆண்டில் 15 நாள் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். அந்த 15 நாளில் அவரை சொத்துப் பங்கீடு தொடர்பாக வழக்கறிஞர்களை சந்திக்கவோ, சொத்தை பார்வையிடவோ போலீஸார் அனுமதிக்கவில்லை. எனது மகன் சாதாரண விடுப்பில் வந்து 2 ஆண்டுகள் முடிந்து விட்டதால், மீண்டும் பரோல் கேட்பதற்கு எங்களுக்கு சட்டப்படி உரிமை உள்ளது. அதனால், ரவிச்சந்திரனை குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காக ஒரு மாதம் பரோல் விடுமுறை வழங்கக்கோரி மதுரை சிறை கண்காணிப்பாளருக்கு மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழக உள்துறை செயலருக்கும் மனு அனுப்பப்பட்டது. எனது இந்த மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி தாக்கல் செய்த இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வில் இன்று ஆகஸ்ட் 2ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் லஜபதிராய், திருமுருகன் வாதிட்டனர்.அப்போது, மனுதாரர் ராஜேஸ்வரி மகன் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க மறுத்து அரசு தரப்பில், மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ரா.கனகராஜ் பிறப்பித்த உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரவிச்சந்திரனுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர் 28.1.1998 முதல் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார். இவருக்கு வழங்கப்பட்ட தண்டையானது இந்திய அரசில் வயர்லெஸ் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டம் சார்ந்துள்ளது. இந்த சட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட தண்டனைகளை இவர் அனுபவித்திருந்தாலும், மத்திய அரசின் அந்த இரு சட்டங்களின் கீழ் இவர் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனவே தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைப்பு விதியின் கீழ் இவர் சாதாரண விடுப்பு பெற தகுதியற்றவர். இதனால் இவருக்கு சாதாரண விடுப்பு வழங்க மறுத்து உத்தரவிடப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
அரசு தரப்பு பதில் மனுவை ஏற்றுப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ரவிச்சந்திரனுக்கு பரோல் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஆனாலும், ரவிச்சந்திரனுக்கு விடுமுறை வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை வழங்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். அண்மையில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையிலுள்ள நளினி தனது மகளின் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கோரி மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *