8 கி.மீ நடந்து சென்று உதவி செய்த மருத்துவ குழுவினர்!

Comments (0) இந்தியா, செய்திகள், மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

குஜராத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக இஎம்ஆர்ஐ 108 என்ற குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஜூலை-30 ஆம் தேதி சுமார் 8 கி.மீ நடந்து 22 வயது பெண் ஒருவருக்கு மருத்துவ உதவி செய்துள்ளது.குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மீட்புப் பணிகளில் மாநில பேரிடர் மீட்பு படையினருடன், ராணுவம் மற்றும் விமானப் படை ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. டெல்லி, சென்னை, புவனேஸ்வர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, கூடுதலாக, 12 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குஜராத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.இதன்படி சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். கடுமையான வெள்ளப்பெருக்கால் கிராமப்புறங்களுக்கு வாகனங்களை இயக்க முடிவதில்லை. கிராமப்புறங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதில் சிரமம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குஜராத்தில் கங்கரேஜ் அருகில் உள்ள நதி உத்தர்பூர் கிராமத்தில் குழந்தை பெற்ற பெண் ஒருவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக இஎம்ஆர்ஐ 108 குழு சுமார் 8 கி.மீ நடந்து சென்று மருத்துவ உதவி செய்துள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குழந்தை பெற்ற இந்தப் பெண்ணுக்கு தையல் போட்ட இடத்தில் வீக்கமும் வலியும் அதிகரித்துள்ளது. இதனால் சுமார் நான்கு நாட்களாகச் சிரமப்பட்டு வந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தியோடர் இஎம்ஆர்ஐ 108 குழுவினர் சம்ப இடத்திற்குச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் பனாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றைக் கடக்க முடியாமல் 108 வாகனத்தை ஆற்றின் கரையோரம் நிறுத்திவிட்டு படகின் மூலம் ஆற்றைக் கடந்துள்ளனர். பின் போக்குவரத்து வசதி முடங்கியதால் 8 கி.மீ தொலைவில் உள்ள நதி உத்தர்பூர் கிராமத்திற்கு மருந்துகளுடன் நடந்து சென்று உதவி செய்துள்ளனர் என மாவட்ட மேலாளர், பானஸ்கந்தா, கல்யாண்சிங் ஜெட்வாட் கூறினார்.இந்த மழைக்காலத்தில் கடந்த பதினைந்து நாட்களுக்குள்,சுமார் 400க்கும் அதிகமான அவசர மருத்துவ உதவிகளை செய்துள்ளதாக இஎம்ஆர்ஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 20 பிரசவங்களும், பாம்பு கடிகளும் அடங்கும். அங்கு பெரும்பாலான பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு விரைவில் சேவையை வழங்க மொபைல் அணிகள் தயார் செய்து உதவி செய்ய நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம் என ஜெட்வாட் கூறினார்.இந்த வெள்ளப்பெருக்கால் குஜராத் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி நடந்து வருகிறது என்றாலும் பல இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இவர்கள் விரைவில் உதவி மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.கடந்த வாரம், குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிலைமையைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, நேற்று முன் தினம் ஜூலை-30ஆம் தேதி ‘மான் கீ பாத்’ நிகழ்ச்சியில் குஜராத் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்தில் போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் அளிக்கப்படும் என்று உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *