கொடுங்கையூரில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் பலி

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னை கொடுங்கையூரில் நேற்று ஜூலை 15ஆம் தேதி நள்ளிரவில் நடைபெற்ற தீ விபத்தில் தீயை அணைக்கப் போராடிய தீயணைப்பு படை வீரர் ஒருவர் பரிதாபமாக பலியானார். 48 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூரில் மீனாம்பாள் சாலையில் உள்ள பேக்கரியில் நேற்று ஜூலை 15ஆம் தேதி நள்ளிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ, அருகில் இருந்த ஏடிஎம் மையத்துக்கு பரவியதால் ஏடிஎம் மையம் எரிந்து கருகியது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடினர். தீ விபத்து ஏற்பட்ட பேக்கரி பூட்டியிருந்ததால் தீயணைப்பு படை வீரர்கள் கதவை உடைத்து திறக்க முயன்றனர். அப்போது, பேக்கரியில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. அந்த நேரத்தில் அங்கே செல்போனில் படம் பிடித்தபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் விபத்தில் சிக்கினர். இதில் 48 பேர் காயம் அடைந்தனர். இதனால் தீ விபத்து நடந்த இடத்தில் பெரும் பதற்றம் நிலவியது.இதுபற்றி தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உடனடியாக அங்கு பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீ விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ஜெயபாலன், ராஜதுரை ஆகிய நான்கு பேரும் அவசரமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் சிகிச்சை பலனின்றி இன்று ஜூலை 16ஆம் தேதி அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த தீ விபத்தில் போலீஸார், ஊர்க்காவல் படையினர், பொது மக்கள் உள்ளிட்ட 48 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 32 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 11 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும், பொது மக்களில் சிலரும் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்இதைத்தொடர்ந்து, இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அரசு வேலை, நிவாரணம் வழங்கப்படும். தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயம் அடைந்தவர்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்படும். தீயணைப்பு உபகரணங்கள் இல்லாததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.மேலும், இந்த தீ விபத்தில் காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *