வேலையில்லா பட்டதாரி 2:-விமர்சனம்

Comments (0) சினிமா, விமர்சனம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கிடைத்த வேலையைச் செய்யாமல், தான் படித்த படிப்புக்கு ஏற்ற, பிடித்த வேலையைச் செய்வது என்பதில் உறுதியாக இருந்த இளைஞனைப் பற்றி வேலையில்லா பட்டதாரி பேசியது. அந்த இளைஞனின் அடுத்த கட்டத்தைச் சொல்கிறது வேலையில்லா பட்டதாரி 2.வாழ்க்கையில் போராடி நல்ல நிலைமைக்கு வந்துள்ள ரகுவரன் (தனுஷ்) அனிதா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தைச் சிறப்பாக நடத்திச்செல்கிறார். மனைவி, அப்பா, தம்பி, தன்னுடைய மோஃபா வண்டி என்று சீராகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் வசுந்தராவின் (கஜோல்) கோபம் குறுக்கிடுகிறது. கட்டுமானத் துறைக்காக வழங்கப்படும் தேசிய அளவிலான எல்லா விருதுகளையும் வசுந்தராவுக்குச் சொந்தமான வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் வாங்கினாலும், சிறந்த பொறியாளருக்கான விருது ரகுவரனுக்குக் கிடைக்கிறது. ரகுவரனைத் தன் நிறுவனத்துக்கு இழுக்க வசுந்தரா செய்யும் முயற்சி தோல்வியில் முடிய, அதனால் ஆவேசமடையும் வசுந்தரா ரகுவரனை வீழ்த்த விரும்புகிறார். பண பலமும் அரசியல் செல்வாக்கும் கொண்ட வசுந்தராவை எதிர்த்து ரகுவரனால் நிற்க முடிந்ததா என்பதே வி.ஐ.பி.2-வின் கதை.
வாழ்க்கையில் போராடி வெற்றிபெற்றாலும் அந்த வெற்றியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. தொடர்ந்து போராடித்தான் அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வி.ஐ.பி.2 காட்டுகிறது. வலியவர்களுக்கும் எளியவர்களுக்கும் இடையிலான போர் பல படங்களில் பார்த்ததுதான் என்றாலும், வி.ஐ.பி-2 படத்தின் காட்சிகளில் சுவாரஸ்யம் காட்டுகிறார்கள் கதாசிரியர் தனுஷும் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்தும்.
மருத்துவமனை கட்டும் புராஜெக்ட் தனுஷ் நிறுவனத்தின் பணி கையை விட்டுப்போவது எதிர்பார்க்கக்கூடியதாக இருந்தாலும், தீம் பார்க் கட்டும் புராஜெக்ட் விஷயத்தில் திரைக்கதை புதிய பாதையில் பயணிக்கிறது. வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காகக் கொள்ள முடியாது என்பதைப் படம் அழுத்தமாகக் காட்டிவிடுகிறது. சதுப்பு நிலத்தில் தீம் பார்க் கட்டப்படுவதற்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தில் மெரினாவிலிருந்து நெடுவாசல்வரை பல போராட்டங்களின் அடையாளங்கள் தெரிகின்றன. இளைஞர்கள் பெறும் வெற்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதம் மிகையானதாக இருந்தாலும் சமூகப் பார்வை அழுத்தமாக வெளிப்பட்டிருப்பதற்கு சபாஷ் போடலாம்.க்ளைமாக்ஸ் எதிர்பாராதது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைத் தாக்கிய பெரு வெள்ளத்தை வைத்துப் படத்தின் முக்கியத் திருப்பத்தை அமைத்துள்ள இயக்குநர், வழக்கமான சவால் படங்களின் ஸ்டீரியோ டைப்பிலிருந்து விலகியிருப்பது பாராட்டத்தக்கது. நாயகனின் வீர தீர பராக்கிரமத்தை வைத்து க்ளைமாக்ஸ் அமைக்கும் வணிகப் படங்களுக்கு மத்தியில் பாத்திரங்களின் மனமாற்றத்தின் மூலம் பிரச்னைக்கு முத்தாய்ப்பு வைப்பது பக்குவமான அணுகுமுறை. படம் முடிந்ததும் ‘சுபம்’ என்று எண்டு கார்டு போடுவதற்காகவே ஹேப்பி எண்டிங் வைத்துவந்த சினிமாவில், இப்படியும் ஒரு ஹேப்பி எண்டிங் வைக்கலாம் எனக் காட்டியிருக்கிறார்கள்.க்ளைமாக்ஸில் காட்டப்பட்டுள்ள வித்தியாசம் படத்தின் முன் பகுதிகளில் அவ்வளவாக இல்லை. தனுஷ் – கஜோல் மோதல் இதுபோன்ற படங்களில் நாம் பலமுறை பார்த்த விதத்திலேயே பெரும்பாலும் உள்ளது. க்ளைமாக்ஸில் ஸ்டீரியோ டைப்பை உடைத்திருக்கும் இயக்குநர் அமலா பாலின் பாத்திரப் படைப்பை வழக்கமான ஒன்றாகவே ஆக்கியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.இளைஞர்களிடம் என்ன திறமை இருக்கிறதோ, அதை நம்பி உற்சாகப்படுத்தினால் இன்றைய இளைஞர்கள் எதையும் சாதிக்கக்கூடியவர்கள் என்பதை முதல் பாகத்தில் பார்த்துவிட்டதால், இரண்டாம் பாகத்தில் மனிதர்களின் மதிப்பு என்ன என்பதைப் பற்றி ரகுவரன் மூச்சுவிடாமல் பேசுகிறார். ரகுவரன் இழந்த தாய்ப்பாசத்தை காமெடியாக மாற்றியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம் என்றாலும் குடும்பத்தில் நடக்கும் காட்சிகள் படத்துக்குக் கொஞ்சம் கலகலப்பைத் தருகின்றன.தனுஷ் வழக்கம்போல உற்சாகமான, அழுத்தமான நடிப்பைத் தந்துள்ளார். முதல் பாகத்தில் இருந்ததுபோன்ற உணர்ச்சிகரமான தருணங்கள் இதில் அதிகம் இல்லை என்றாலும் நடனம், கஜோலிடம் கெத்து காட்டுவது, மனைவிடம் பம்முவது என்று மனிதர் ஜமாய்க்கிறார்.கஜோலின் கம்பீரமான தோற்றமும் அநாயாசமான நடிப்பும் படத்தின் பெரிய பலம். கிட்டத்தட்டக் கதாநாயகனுக்கு இணையான பாத்திரத்தை மிக அழகாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.
அமலா பால், சமுத்திரக்கனி, விவேக் ஆகியோர் உறுதுணைப் பாத்திரங்களில் தங்கள் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.ஷான் ரால்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ‘இறைவனாய் தந்த இறைவியே’ பாடல் இனிமை. பின்னணி இசை பரவாயில்லை. நடன அமைப்பு, ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள் ஆகியவை படத்துக்குப் பக்கபலம். மழையில் நடக்கும் சண்டைக் காட்சியை சமீர் தஹீர் சிறப்பாகப் படமாக்கியுள்ளார்.கஜோலிடம் சவால் விடுவது, தீம் பார்க்குக்கு எதிரான வாதங்கள், க்ளைமாக்ஸ் எனப் பல இடங்களில் தனுஷின் வசனங்கள் கைத்தட்டல் பெறுகின்றன.

 • 1502476225c
 • 1502476225a
 • 1502476225b
சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகமாகிவரும் மக்கள்தொகை காரணமாக பணத்தாசை பிடித்தவர்களும், போட்டி போட்டுக்கொள்ளும் கட்டுமான நிறுவனங்களும் எந்த அளவுக்குத் தங்களது அடிப்படைக் கடமைகளையும், சமூகத்தின் மீதான பொறுப்புகளையும் துறந்து செயல்படுகிறார்கள் என்பதைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். மவுலிவாக்கம் கட்டட விபத்து, தி.நகர் நகைக்கடை தீவிபத்து ஆகியவற்றை சமீபத்தில் கடந்துவந்திருக்கும் மக்களுக்கு, கும்பகோணம் தீ விபத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களை நீதிமன்றம் விடுவித்துள்ள கோபமும் அதிகமாக இருக்கும் சமயத்தில் அவற்றையெல்லாம் பிரதிபலிக்கும் வி.ஐ.பி-2 அவ்வகையில் முக்கியமான படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *