விமர்சனம்: மெர்சல்!

Comments (0) சினிமா, விமர்சனம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 • Vijay, Samantha in Mersal Movie HD Stills
 • மெர்சல்2
 • மெர்சல்3
 • மெர்சல்4

விஜய் மூன்று கேரக்டரில் நடித்திருக்கும் படம் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ‘மெர்சல்’ திரைப்படம், அதன் பெயரால் உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதன் தீர்ப்பு தீபாவளி நாளான நேற்று ரசிகர்களால் எழுதப்பட்டது. சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை அவுட்லைனாக எடுத்துக்கொண்டு, அதில் தனிப்பட்ட காரணத்துக்காகப் பழி வாங்கும் ஸ்டைலுக்கு பதில் சமூகப் பிரச்னைக்காகவும் சேர்த்து பழி வாங்குவதாக தனது கதையை மாற்றிக்கொண்டு களமிறங்கியிருக்கிறார் அட்லீ. இப்படியொரு சமூகப் பிரச்னையைத் தேர்ந்தெடுத்ததற்காக பாராட்டப்பட வேண்டியவர் விஜய். இந்திய – தமிழகப் பிரச்னைகளைப் பற்றிப் பேசியிருக்கும் மெர்சல் அதகளமாகவே இருக்கிறது.அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும் டிஜிட்டலுக்கு மாற வேண்டும் எனச் சொல்லிவிட்டு பேருந்துக் கட்டணத்துக்கும், அன்றாடச் செலவுக்கும் பணத்தைப் பயன்படுத்தச் சொல்வதையும், ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்து போவதையும், ஒரு விபத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் சொத்துகள் அனைத்தும் பிடுங்கப்படுவதையும் செய்திகளாகப் படிக்கும்போது ஒவ்வொரு மனிதநேயமிக்க மனதும் நினைக்கும் வார்த்தைகளை மெர்சல் விவரிக்கிறது.மருத்துவம் சார்ந்த இந்தக் கோணத்தை எடுத்துவிட்டுப் பார்த்தால், மெர்சல் ஒரு பழைய மசாலா. அதில் கவர்ச்சிக்கு விஜய்யைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தனது மருத்துவ அறிவைக்கொண்டு ஏழைகளுக்குச் சேவை புரியும் மாறனுக்குச் சர்வதேச விருது கிடைக்கிறது. அதேசமயம், அவர் சில பல கடத்தல்களையும் கொலைகளையும் வடிவேலு துணையுடன் அரங்கேற்றுகிறார். இடையில் மேஜிக் ஷோ வேறு செய்கிறார். காவல்துறை அதிகாரி சத்யராஜின் விசாரணையில் டாக்டரின் கிரிமினல் காரியங்களுக்கான பின்னணி தெரியவருகிறது. சமூகப் போராளி டாக்டரைப் போட்டுத்தள்ள கார்ப்பரேட் டாக்டர் எஸ்.ஜே.சூர்யா துடிக்க, அப்போதுதான் டாக்டர் உருவத்தில் இருப்பது ஒருவரல்ல இருவர் என்னும் உண்மை தெரியவருகிறது. ஒரேமாதிரி இருக்கும் அந்த இருவரின் பின்னணியைச் சொல்லத் திரைக்கதை 30 ஆண்டுகளுக்குப் பின்னால் பயணிக்கிறது. சமூக நோக்கமும் தனிப்பட்ட நோக்கமும் இணைந்த பழிவாங்கும் படலத்தில் மாறனுக்கு எப்படி வெற்றி கிடைக்கிறது என்பதை சமூக விமர்சனத்தோடு ஓரளவு விறுவிறுப்பாகச் சொல்கிறார் அட்லீ.ஒருகட்டம் வரையிலும் சஸ்பென்ஸைக் காப்பாற்றுவது படத்தின் சுவாரஸ்யத்தைத் தக்கவைக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் பின்னூட்டக் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும் வேகத்தில் கொஞ்சம் பின்தங்கித்தான் இருக்கின்றன. மருத்துவமனைக் காட்சிகளில் செய்தி சொல்லும் வேகம் இருக்கும் அளவுக்கு யதார்த்தம் இல்லை. வில்லனின் பாத்திரப் படைப்பும் அப்படித்தான். விஜய்களின் தோற்றம், ஸ்டைல், நேரடியாகவே அரசியல் பேசும் வசனங்கள், சண்டைக் காட்சிகள், அவருடைய நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்திய அளவுக்குப் படத்தின் இதர அம்சங்களில் கவனம் செலுத்தப்படவில்லை. எனவே கதைக் கருவைத் தாங்கிப்பிடிக்க வேண்டிய துணை அம்சங்கள் தம் கடமையிலிருந்து தவறுகின்றன. இரண்டு விஜய்களின் நடவடிக்கைகளை வைத்து லாஜிக்காகக் கேள்வி எழுப்பினால் திரைக்கதை தள்ளாட ஆரம்பித்துவிடும். உதாரணமாக பாரிஸில் நடக்கும் காட்சிகள். ஆனால், இந்த ஓட்டைகளை மீறித் திரைக்கதையின் விறுவிறுப்பு படத்தைப் பார்க்க வைக்கிறது. வெற்றிமாறனாக வரும் ஃப்ளாஷ்பேக் விஜய் மட்டுமே வியக்க வைக்கிறார். துறுதுறுவென இருக்கும் குஷியான விஜய்யைக் காட்டியிருப்பதற்கு அட்லீக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்தே ஆக வேண்டும். நித்யா மேனன் என்ற நடிகையின் ஆளுமை மற்றவர்களை ஓரம்கட்டுவது உண்மையாகவே மெர்சல். மற்றவர்களெல்லாம் கெஸ்ட் ரோல்தான். வடிவேலு இந்தப் படத்திலும் முழுத் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை என்ற சோகம் நீடிக்கிறது. காஜல் அகர்வால், சமந்தா இருவரும் இந்தப் படத்தில் எதற்குத்தான் வருகிறார்கள் என்பது கடைசிவரை தெரியவே இல்லை. ஏ.ஆர். ரஹ்மானுக்கு என்னதான் ஆச்சு? ஆளப்போறான் தமிழன், நீதானே ஆகிய இரண்டு பாடல்கள் மட்டுமே கேட்கும்படியும் முணுமுணுக்கும்படியும் இருக்கின்றன. பின்னணி இசையிலும் குறிப்பிடத்தக்க அம்சம் அதிகமில்லை. சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள அனல் அரசுக்கு ஒரு சபாஷ்! மருத்துவ உலகம் எவ்வளவு வேகமாகவும் கறாராகவும் தனது வியாபாரத்தை நடத்திக்கொண்டிருக்கிறது என்பதை மெர்சல் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. குரோம்பேட்டையில் இருக்கும் அரசு மருத்துவமனையைக் கடந்து சுற்றியிருக்கும் தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் சீறிப் பாயும் சில ஆம்புலன்ஸ்களைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் தோன்றும் கேள்வியை மெர்சல் படம் சொன்னாலும், அதை நோக்கிக் கேள்வியெழுப்பத் தேவையான காரணங்களும் இருக்கின்றன. ஒரு துறையை நோக்கி கேள்வியெழுப்பும் மனநிலையை ரசிகர்களிடையே உருவாக்குவதைவிட ஒரு படம் என்ன செய்துவிட முடியும்? ஆனால், அதற்காகப் படத்தின் போதாமைகளைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. அட்லீ தன்னை ஒரு ‘மினி’ ஷங்கராக நிலைநிறுத்திக்கொள்ள முயல்வது சரிதான். எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கும் ஆசை, ஷங்கரின் ஸ்டூடண்டான அட்லீக்கு இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், அந்நியன் படத்தில் விக்ரமின் தங்கை இறந்துபோவது போலவே தனது படத்திலும் ஒரு காட்சி வைக்க வேண்டும் என்பது எப்படிப்பட்ட ஆசை? ஓர் இழப்பை அழுத்தத்துடன் காட்டுவதற்குத் தெறிக்கும் ரத்தத்தை ஸ்லோமோஷனில் காட்ட வேண்டும் என்று என்ன அவசியம்? அப்படிப்பட்ட காட்சிகளுக்காகவே, U சர்டிஃபிகேட் கிடைக்க வேண்டிய படத்துக்கு U/A சர்டிஃபிகேட் வாங்குவது தயாரிப்பு தரப்புக்குச் செய்யும் நியாயமா? கதைக்குத் துளியும் தொடர்பில்லாத இரு ஹீரோயின்களை ஜோடி வைத்தாக வேண்டும் என்பதற்காகப் பல கோடிகளில் கமிட் செய்திருப்பதை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?  ஹீரோவைப் போற்றிப் பேசுவதற்காகவும், கிளாமரான பாடல்களுக்காக மட்டும் நடிகைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்பதுதான் நடிகைகளின் கோரிக்கையாகவும் இருக்கிறது. வில்லன் சமந்தா, கோவை சரளா ஆகியோரின் கழுத்தில் கத்தி வைத்து விஜய்யை மிரட்டுவது போலக் காண்பித்திருக்கிறார் இயக்குநர். இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் பெண்களை ஆண்களின் பலவீனமாகவே சித்திரிக்கப்போகிறது தமிழ் சினிமா? மதுரையில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிய முதல் இயக்குநர் என்ற பெருமை அட்லீக்கு உண்டு என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.ஃப்ளாஷ் பேக் – டபுள் ஹீரோ – ஹீரோயின் கொலை – வித்தியாசமான வில்லன் ஆகிய மசாலாக்களை லோக்கல் வசனங்களுடன் கலந்து, மேலும் ஒரு ஹீரோயினைப் பாடலுக்கு வைத்து, காமெடி என்ற பெயரில் சத்யனையும், சிறப்பு வேடத்துக்கு சத்யராஜையும் சேர்த்தால் அட்லீ படம் ரெடி என சினிமா பாடப் புத்தகத்தில் சேர்க்கும் நிலைக்கு வந்துவிடாதீர்கள் அட்லீ. உங்களது ஒரிஜினல் சரக்கு ஒன்றை ‘ரா’வாக ஒருமுறையாவது பரிமாறுங்கள். காக்டெயில்கள் திகட்டத் தொடங்கிவிட்டன.மொத்ததில்’ மெர்சல்’பழைய சாதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *