திருச்சி கலெக்டர் காரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

விவசாய தொழிலாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டி.முருங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100 பேர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் ஆகியோருடன் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் இருந்த கலெக்டர் கே.ராஜாமணியை சந்தித்து முறையிட்டனர்.
விவசாய வேலைகளுக்காக வெளியில் சென்றிருந்தவர்களை அவர்கள் அணிந்து இருந்த கோவணம் மற்றும் ஜட்டியுடன் போலீசார் பிடித்து சென்றிருக்கிறார்கள். வீட்டிற்கு சென்று வேட்டி, சட்டை அணியக்கூட அவகாசம் வழங்காமல் மிகவும் கொடூரமான முறையில் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாதவகையில் போலீசார் கைது செய்துள்ளனர். லாரியை மறித்ததற்காக சம்பந்தமே இல்லாத இவர்களை கைது செய்தது ஏன்? என அவர்கள் கலெக்டரிடம் கேட்டனர். கலெக்டர், அவர்களிடம் போலீசார் பிடித்து சென்றவர்களை விடுவிக்க ஆவன செய்வதாக உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே காத்திருந்தனர். இந்நிலையில் மதியம் 2 மணியளவில் போலீசார் பிடித்துச்சென்ற 7 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக டி.முருங்கப்பட்டி கிராம மக்களுக்கு தகவல் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு மீண்டும் கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். அப்போது பெண்களுக்கும், கலெக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து டி.முருங்கப்பட்டி கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகத்தின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கலெக்டரின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். சுமார் ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. ‘19 தொழிலாளர்களின் சாவுக்கு காரணமான ஆலை அதிபர் வெடிவிபத்து நடந்து ஓராண்டு ஆகும் நிலையில் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால் அப்பாவி விவசாயிகளை போலீசார் கைது செய்து, சிறையில் அடைப்பதா, எங்களையும் சேர்த்து கைது செய்து சிறையில் அடையுங்கள். சிறைக்கு செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம், கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் வரை இங்கேயே காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்’ என அவர்கள் ஆவேசமாக குரல் எழுப்பினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் கிராம மக்களின் பிரதிநிதிகளை அதிகாரிகள் அழைத்து பேசினார்கள். அதில் அவசரகால ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்து, கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *