செவிலியர்கள் போராட்டம்: நோயாளிகள் திண்டாட்டம்!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில், ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இதற்கு மருத்துவர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்திருப்பதால் மருத்துவ சிகிச்சைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எம்.ஆர்.பி. செவிலியர் நலச் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்: ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் செவிலியர்களுக்கு உடனடியாக பணி நிரந்தரம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். செவிலியர்களைப் பணி நியமனம் செய்யும்போதே, நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஒப்பந்த முறை, தற்காலிக முறையில் செவிலியர்களைப் பணிநியமனம் செய்யக் கூடாது. 8 மணி நேர வேலை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.“தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 11,000 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் பணிநியமன வாரியம் மூலம் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள், தர வரிசை மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பணிநியமனம் செய்யும்போதே, நிரந்தர அடிப்படையில் நியமிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் அரசு நியமித்துள்ளது. அவர்களுக்கு, நிரந்தரச் செவிலியர்களுக்கான ஊதியம், சலுகை போன்றவையும் வழங்கவில்லை. தொகுப்பூதியமாக வெறும் 7,700 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. நிரந்தர செவிலியர்களுக்கான பணியிடங்கள் காலியாகும்போது மட்டுமே இச்செவிலியர்களுக்கு பணி நிரந்தரமும், காலமுறை ஊதியமும் வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம் பெறுவதற்காக 7 முதல் 8 ஆண்டுகள் வரை காத்திருக்க நேரிடுகிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது. பணி நிரந்தரம் பெறுவதுவரை இச்செவிலியர்களுக்கு ஆண்டுக்கு 500 ரூபாய் மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. எம்.ஆர்.பி. மூலம், நான்கு மாதங்களுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட 2,800 கிராம சுகாதாரச் செவிலியர்களுக்கு, பணி நியமனத்தின்போதே காலமுறை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. லேப் டெக்னீஷியன், டார்க் ரூம் உதவியாளர், ஆண் மற்றும் பெண் செவிலியர் உதவியாளர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் இதர மருத்துவத் துறை ஊழியர்களுக்கும், எம்.ஆர்.பி மூலம் பணி நியமனம் செய்யப்பட்டபோதே காலமுறை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. செவிலியர்களுக்கு அவ்வாறு வழங்காதது கண்டனத்துக்குரியது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “செவிலியர்கள் தங்கள் உரிமைக்காகப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்று விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பிரியங்கா சின்னத்தம்பி கூறுகிறார். அதே சமயம், இந்தப் போரட்டத்தால் மருத்துவமனைகளில் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அரசும், செவிலியர்களும் உணர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டும் பிரியங்கா, இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசிடம் பொதுமக்கள் சார்பாக கேட்டுகொள்கிறேன் என்று சொல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *