சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் இங்கிலாந்து செல்லகிறார் கார்த்தி சிதம்பரம்

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
ப.சிதம்பரம் முன்பு மத்திய நிதி மந்திரியாக பதவி வகித்த போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா குழுமம் மொரிசியஸ் நாட்டில் இருந்து நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெற்றுத்தந்ததாகவும், இதற்காக அவரது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக 2 வழக்குகளை சி.பி.ஐ. போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. ‘சம்மன்’ அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக, அவரை தேடப்படும் நபராக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அவருடன் இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ரவி விஸ்வநாதன் உள்பட மேலும் 4 பேரையும் தேடப்படும் நபர்களாக மத்திய அரசு அறிவித்தது.இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரமும், மற்றவர்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக விசாரித்த ஐகோர்ட்டு, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5 பேரையும் தேடப்படும் நபர்களாக அறிவித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. ஐகோர்ட்டின் இந்த தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம், தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்காக இங்கிலாந்து செல்ல அனுமதி வேண்டும் என கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்ற போது சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வெளிநாட்டுக்கு செல்ல அனுமதித்தால் அவர் சாட்சியங்களை, ஆதாரங்களை கலைத்து விடுவார் என கூறியது.இவ்வழக்கு மீதான விசாரணை மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் 9-ம் தேதி நடைபெற்ற போது சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீலிடப்பட்ட ஆவணங்களை கோர்ட்டு ஆராய்ந்தது. விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு, நிபந்தனைகளுடன் கார்த்தி சிதம்பரம் 4 அல்லது 5 நாள் இங்கிலாந்து சென்று வர அனுமதி அளிக்கலாமா? என்பதில் சிபிஐ தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க கேட்டுக் கொண்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா  சி.பி.ஐ.யின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் குறிப்பு ஒன்றை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் இங்கிலாந்து செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கார்த்தி சிதம்பரம் வருகிற டிசம்பர் 1–ந் தேதி முதல் 10–ந் தேதிக்குள் இங்கிலாந்து சென்றுவிட்டு இந்தியா திரும்பி விட வேண்டும் என்றும், இதுபற்றிய உத்தரவாதத்தை 3 நாட்களுக்குள் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.  கார்த்தி சிதம்பரத்துக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியதை எதிர்காலத்தில் கோர்ட்டுகளில் முன் உதாரணமாக காட்டக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறிஉள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *