இதே ஒற்றுமையோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நிரூபித்துக் காட்டுவோம்!

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ராமநாதபுரத்தை அடுத்த பட்டணம்காத்தான் அம்மா பூங்கா மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை தாங்கினார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை திறந்து வைத்து எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார்.நடைபெற்று முடிந்த பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.விழாவில் பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-மீனவர்களுக்கு தி.மு.க. இழைத்த துரோகத்தை யாரும் மறந்து விட முடியாது. காலம் காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வரும் கச்சத்தீவு பிரச்சினையை தீர்ப்பதற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டார். கச்சத்தீவு பிரச்சினை தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாகத்தான் இருக்கிறது. முந்தைய தி.மு.க. அரசு தன் கையிலிருந்த தும்பை விட்டு விட்டு, தனக்குப்பிறகு வருகிறவர்கள் வாலை பிடிக்கட்டும் என்று இருந்து விட்டார்கள். கச்சத்தீவு, இலங்கை நாட்டிற்கு தாரை வார்க்கப்படுவதற்கு முன்பே அப்போதைய தி.மு.க. முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் மத்திய அரசு 2 முறை ஆலோசனை நடத்தியிருக்கிறது. அதை சரியான வாய்ப்பாக கருதி கச்சத்தீவு இலங்கைக்கு செல்வதை தடுக்க முட்டுக்கட்டை போட்டிருக்கலாம் அல்லது மத்திய அரசுக்கு அப்படிப்பட்ட ஒரு எண்ணம் இருக்கிறது என்பதை மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். இந்த இரண்டையும் தி.மு.க. அரசு செய்யாமல் தமிழக மீனவர்களுக்கு துரோகம் இழைத்தது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இருந்தது தி.மு.க. அரசுக்கு தெரியாதா? மீனவ நலன் காக்கும் உண்மையான அரசாக இருந்திருந்தால் உடனே மக்களைக்கூட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியிருக்கலாம். ஒரு சிறு துரும்பு அளவுக்கு கூட தி.மு.க. அரசு தன் எதிர்ப்பை காட்டவில்லை. எல்லாம் பறிபோன பிறகு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள். அன்றைக்கு ஆரம்பித்த நாடகம் தான், அன்றைக்கு போட்ட வேஷம் தான் இன்று வரை தந்தை, மகன் என்று தொடர்கிறது. இவர்கள் செய்த தவறுக்கெல்லாம் 1991-ம் ஆண்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார். 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அப்போது தி.மு.க. ஆதரவுடன் ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் அரசு பல காரணங்களை கூறி மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது. அப்போதும் இதை தி.மு.க. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த துரோகத்தையெல்லாம் நீங்கள் மறந்து விடக்கூடாது. இவர்கள் செய்த தவறால் இன்றைக்கு நம் மீனவ நண்பர்கள் இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுவதும், தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்ந்து வாடிக்கையாக நடந்து வருகின்றன. தற்போது நாங்கள் மத்திய அரசுடனான கூட்டங்களிலும் நேரிடையாக கலந்துகொண்டு மீனவர் பிரச்சினை குறித்து வலியுறுத்தி வருகிறோம். இதன் மூலம் மிகவிரைவில் கச்சத்தீவு பிரச்சினைக்கு தீர்வு காண்போம்.
இதுவரை 25 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாக கொண்டாடி 26 மாவட்டமாக ராமநாதபுரத்தில் இந்த விழாவை கொண்டாடுகிறோம். நாங்கள் கடந்த 25 மாவட்டத்திற்கும் செல்கின்றபொழுது, இந்த இரட்டை இலையை காணமுடியவில்லை, காட்டக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இப்போது வருகின்ற வழிநெடுகிலும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் இரட்டை இலையை ஏற்றி முகம் மலர்ச்சியைக் காட்டி, இந்த இரட்டை இலையை எந்தக்கொம்பனாலும் தடுத்து நிறுத்தமுடியாது. ஒன்றரை கோடி அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்களுடைய உயிர்மூச்சாக விளங்கக்கூடிய இரட்டை இலை நமக்கு கிடைத்திருக்கிறது என்பதை இந்த மாவட்ட மக்கள் நிரூபித்துக்காட்டியிருக்கின்றார்கள். இன்னும் சிலர் தெரிவிக்கின்றார்கள், இந்த இரட்டை இலை போனாலும் பரவாயில்லை, அதை நம்பி நாங்கள் இருக்கவில்லை என்று சொல்கிறார்கள், பிறகு ஏன் இவர்கள் போராட்டம் செய்யவேண்டும், விட்டு விடுங்களேன். ஆனால் அதற்கு மனமில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு, சதி செய்து, இந்த இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நம்முடைய எதிரிகளோடு கூட்டு சேர்ந்து, சதி செய்து, கழகத்தை அழிக்கப் பார்த்தார்கள். இந்த இரட்டை இலையை முடக்கப் பார்த்தார்கள். ஆனால் எல்லாம் வல்ல இறைவன் அருளால், மேலே இருந்து இருபெரும் தெய்வங்கள் நமக்கு அருளாசி வழங்கி, நல்ல தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கி நமக்கு இரட்டை இலையை தந்திருக்கிறது. விரைவில் ஆர்.கே.நகர் சட்டமன்றத்தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜெயலலிதாவின் கோட்டையாக விளங்குகின்ற தொகுதிக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலின் மூலமாக, இந்த இரட்டை இலைக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று நாம் நிரூபித்துக்காட்டுவோம்.இந்தத் தேர்தல் மட்டுமல்ல, இதற்கு பிறகு வருகிற உள்ளாட்சி தேர்தலானாலும் சரி, நாடாளுமன்ற தேர்தலானாலும் சரி, எந்த தேர்தல் வந்தாலும் ஒன்றரை கோடி தொண்டர்களோடு உழைத்து, பொதுமக்களுடைய ஆதரவோடு நாம் வெற்றிப் பாதையிலே செல்வோம், செல்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என்று அவர் பேசினார்.
விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- அ.தி.மு.க. தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்தால் நம்மை வெல்வதற்கு யாரும் இல்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அதன்படி நாம் ஒற்றுமையோடு இருப்பதால் இரட்டை இலை சின்னம் நமக்கு கிடைத்துள்ளது.
இதே ஒற்றுமையோடு அடுத்த மாதம் நடைபெற உள்ளதேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும். இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க ஒற்றுமையாக செயல்பட்டது போல இனி எந்த தேர்தல் வந்தாலும் நாம் ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றிக்கனியை பறித்து ஜெயலலிதாவின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். என்று அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *