ஜூலி 2 : விமர்சனம்

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தன்னை ஒரு போகப்பொருளாகப் பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில் பாசத்தைத் தேடி அலையும் ஒரு நடிகையின் வாழ்க்கையைக் கவர்ச்சி கலந்து உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கும் படம் ஜூலி 2. திரைத்துறையில் பிரபல நடிகையாக வலம்வருபவர் ஜூலி. இவருடைய ஆரம்ப கட்டத்தில் தனது வளர்ப்புத் தந்தையாலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். அவர் ஜூலியின் இளமையையும் அழகையும் பணமாக்க நினைக்கிறார். ஜூலி சம்மதிக்காததால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட, அடைக்கலம் தருகிறார் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன்னி (ரதி). அவரின் ஆதரவோடு பல போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவில் நடிகையாக வாய்ப்பு கிடைக்கிறது. அதை தக்கவைத்துக் கொள்ள தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தாதா என அனைவருடனும் சில அட்ஜெஸ்மென்ட் செய்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். முதலில் அதை மறுத்தாலும் ஒரு கட்டத்தில் அதற்குச் சம்மதிக்கிறார் ஜூலி. இதனால் அவருக்குப் பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. புகழின் உச்சிக்குச் செல்கிறார். பல்வேறு சவால்களும் தொடர்கின்றன. ஜூலியின் வாழ்க்கை குறித்தும் அவர் சந்திக்கும் பிரச்னைகளையும் பல சுவாரஸ்ய முடிச்சுகளோடு சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் தீபக் ஷிவ்தாசனி. கவர்ச்சியான ஆடை, முத்தக்காட்சி, படுக்கை அறைக்காட்சி எனப் படம் முழுவதும் படு கவர்ச்சியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்திலும் மிகவும் தாராளம் காட்டி அடித்திருக்கிறார் ராய் லட்சுமி. வெறுமனே கவர்ச்சியை மட்டும் நம்பாமல் திரைத்துறையில் நடிகையாக வாய்ப்பு தேடி அலையும் பல இளம் பெண்கள் தங்களுக்குத் திறமை இருந்தும், அதை வெளிக்காட்ட பலரின் பாலியல் இச்சைக்கு ஒத்துழைக்க வேண்டிய அவலநிலை சினிமா துறையில் இருக்கிறது என்பதை திரைக்கதையில் மிக அழுத்தமாகவும் அப்பட்டமாகவும் பதிவு செய்துள்ள இயக்குநருக்குப் பாராட்டுக்கள். சமீர் ரெட்டி ஒளிப்பதிவில் படத்தின் காட்சிகள் ரசிக்கும்படியாகவும், கலர் ஃபுல்லாகவும் உள்ளது. ராய் லட்சுமியின் கிளாமரை அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தாலும் அதீதமான குளோசப் காட்சிகள் ஒரு கட்டத்தில் முகசுளிப்பை உண்டாக்குகிறது. விஜூ ஷா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் பாலிவுட்டில் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் ராய் லட்சுமி கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார். போகப்பொருளாகவும், சதையை மட்டும் விரும்பும் ஆண்களுக்கு மத்தியில் பாசத்தை எதிர்பார்க்கும் ஜூலியின் பரிதவிப்பையும், மிக அழகாக தனது நடிப்பின் மூலம் வெளிக்காட்டியுள்ளார் ராய் லட்சுமி. தெலுங்கு நடிகராக வரும் ரவி கிஷன் அந்தக் கதாபாத்திரத்தில் சற்றும் பொருந்தவில்லை. காவல் துறை அதிகாரியாக வரும் ஆத்திய ஸ்ரீவட்சவா தனது நடிப்பால் அனைவரின் பாராட்டையும் பெறுகிறார். ஜூலியின் உதவியாளராக வரும் ரதி யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.பாடல்கள் மற்றும் பல காட்சிகளில் ஜூலி கதாபாத்திரத்தை ஒரு பாலியல் இச்சையைத் தூண்டும் கேரக்டராக, அவரது அங்கங்களை குளோசப்பில் காட்சிப்படுத்தியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். கிளாமர் காட்சிகளைத் தாண்டி, பெண்கள் நடிக்கும் மற்ற காட்சிகளிலும் அவர்களிடத்தில் கிளாமரை எதிர்பார்க்கும் பார்வையாகவே அது இருக்கிறது. சேலை எப்போது விலகும் எனக் காத்திருக்கும் சிலரின் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய இந்தக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதுபோல தெரிகிறது. ஒரு பெண் நடிகையாக முத்திரை பதிப்பதற்கு இத்தனைக் கொடூரங்களைத் தாண்டி வர வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்க வேண்டிய ஜூலி 2 திரைப்படம், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியான பிரச்னைகளைச் சொல்ல அவர்களைக் கவர்ச்சியாகக் காட்டித்தான் சொல்ல வேண்டிய நிலையில் சினிமா துறை உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

 • ஜூலி 2 5
 • ஜூலி 2
 • ஜூலி 2 2
 • ஜூலி 2 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *