சக்க போடு போடு ராஜா – விமர்சனம்

Comments (0) சினிமா, விமர்சனம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஒருவன் தன் நண்பன் காதலுக்கு உதவி செய்யப் போக, அதனால் ஏற்படும் விளைவு அவன் காதலைப் பாதிக்க… அதைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் கதையே சக்க போடு போடு ராஜா.தெலுங்கில் 2014ஆம் ஆண்டு கோபி சந்த், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளிவந்த ‘லௌக்யம்’ என்ற படத்தின் ரீமேக்தான் சக்க போடு போடு ராஜா. அறிமுக இயக்குநர் ஜி.எல்.சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா,

 • சக்க போடு போடு ராஜா 2
 • சக்க போடு போடு ராஜா 1
 • Santhanam & Vaibhavi Shandilya in Sakka Podu Podu Raja Movie Images HD

, சம்பத்ராஜ், சேது, சஞ்சனா சிங், விடிவி கணேஷ், ரோபோ ஷங்கர்  என பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் உருவாகியுள்ளது. சந்தானத்தின் நண்பனான சேது, தாதாவாக இருக்கும் சம்பத்தின் தங்கையான பாப்ரி கோஷைக் காதலிக்கிறார். எதிர்ப்பை மீறித் தன் நண்பன் சேதுவின் காதலைச் சேர்த்து வைக்கப் போராடுகிறார் சந்தானம். இதனால், கோபமடையும் சம்பத், சந்தானத்தைக் கொல்ல முயற்சி செய்கிறார். சந்தானம் சென்னையில் இருந்தால் பிரச்னை வரும் என்று பெங்களூரு சென்று விடுகிறார். அப்போது யதார்த்தமாக வைபவியை சந்திக்க இருவரும் காதலில் விழுகின்றனர். அந்தக் காதலும் குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாகிறது. இதற்கிடையில் வைபவியைக் கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அவர்கள் யார், சந்தானம் பிரச்னைகளை எப்படிச் சமாளித்தார், தன்னுடைய காதலியை எப்படிக் கரம் பிடித்தார் என்பதுதான் மீதிக் கதை. குடும்பத்தினரின் சம்மதத்தோடு காதலியைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சேதுராமன். கொஞ்சம் பழைய கதை என்றாலும், அதில் கொஞ்சம் வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார். அந்த வகையில் அவருக்குப் பாராட்டுகள். எங்கேயோ ஆரம்பித்து முதல் பாதியில் எங்கேயோ கொண்டு போய் நிறுத்தினாலும் இடைவேளை முடிந்ததுமே சஸ்பென்ஸ் உடைந்து விடுகிறது. அதன் பிறகு பார்வையாளர்களைக் கடைசி வரை உட்காரவைக்க வேண்டும் எனப் பார்த்துப் பார்த்துக் காட்சிகளைக் கோத்திருக்கிறார் இயக்குநர். அடுத்தடுத்துப் பல ட்விஸ்ட்களை வைக்கிறார். ஆனாலும், இரண்டாம் பாதி நகரத் திணறுகிறது. திரைக்கதை பல இடங்களில் மிக மெதுவாக நகர்ந்து சோர்வை உண்டாக்குகிறது. திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கலாம்.சந்தானத்துக்கு ஏற்ற கதையைப் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். தில்லுக்கு துட்டு படத்தைக் காட்டிலும் சந்தானத்தின் தோற்றம், ஸ்டைல், நடனம் எல்லாமே மாறியிருக்கின்றன. ஆனால், ரோபோ ஷங்கர், விவேக் கூட்டணியில் இணைந்திருக்கும் சந்தானத்தின் நடிப்பு, வழக்கமான சந்தானத்தையே நமக்கு நினைவூட்டுகிறது. நாயகனான பிறகும் ஸ்டாண்ட்அப் காமெடி போலவே பேசும் சந்தானத்தின் ஸ்டைல் இந்தப் படத்தில் எடுபடவில்லை. வைபவி சாண்டில்யா படம் முழுக்க அழகாகத் தோன்றியிருக்கிறார். தாதாவின் தங்கையாக, திமிர் பிடித்த பெண்ணாக நடிக்க முயற்சித்துள்ள வைபவியின் முயற்சியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. வைபவியின் கதாபாத்திரத்துக்கு இயக்குநர் இன்னமும் முக்கியத்துவம் அளித்திருக்கலாம். விடிவி கணேஷ், சஞ்சனா சிங், மயில்சாமி, சேது, பவர் ஸ்டார் ஆகியோர் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளனர். தங்கைக்காக எதையும் செய்யத் துடிப்பவராக நடித்திருக்கிறார் சம்பத்ராஜ். சரத் லோகிதஸ்வா, நாராயண் லக்கி ஆகியோரும் தங்களுக்குக் கொடுத்துள்ள வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.சண்டைக் காட்சிகளில் அஜித், விஜய்க்கு இணையாக ஸ்கோர் செய்ய முயற்சித்திருக்கிறார் சந்தானம். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல். சிம்பு இசையில் கலக்கு மச்சான் பாடல் ரசிக்கும்படியாக உள்ளது. எனினும், எதிர்பார்த்த அளவு சிம்பு இசையமைப்பாளராகத் தேர்ச்சி பெறவில்லை. அந்தோணி படத்தொகுப்பில் காட்சிகளின் வேகத்தை இன்னும் கூட்டியிருக்கலாம். ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று சந்தானம் முடிவெடுத்த பின் இன்னும்கூட நல்ல அழுத்தமான கதைகளைத் தேர்வு செய்யலாம். நகைச்சுவை, காதல், நட்பு, ஆக்ஷன், த்ரில்லர் என ஒரு கலவையாக இருந்தாலும் லாஜிக் மீறல்கள், நம்ப முடியாத காட்சிகள், முந்தைய தமிழ்ப் படங்களின் சாயல்கள் என அனைத்தும் படத்துக்குத் தொய்வை ஏற்படுத்தியிருக்கின்றன. மொத்தத்தில் காட்சிகளிலும் கதாபாத்திரங்களிலும் கூடுதல் சுவாரஸ்யத்தையும், அழுத்தமான பதிவுகளையும் சேர்த்திருந்தால் சக்க போடு போடு ராஜா, உண்மையில் சக்க போடு போட்டிருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *