ரஜினியின் ஆன்மிகம் அரசியல் இயக்கமாகாது!

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

‘ஆன்மிகம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பம். அதை ஓர் இயக்கம் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார் தினகரன். ஆர்.கே.நகரில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தினகரன், தனது தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இன்று (ஜனவரி 3) நன்றி தெரிவிக்கவிருக்கிறார். நேற்று தனது அடையாறு இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தினகரன், தமிழக அரசியலில் உள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, “ஸ்லீப்பர் செல் என்று சொன்னவர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தங்கள் வேலையைக் காண்பிப்பார்கள்” என்றார். மேலும், சிறையில் இருக்கும் சசிகலா தன்னிடம் கொடுத்த வீடியோ ஆதாரங்களே தற்போது விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், வேறு ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் சசிகலாவின் சார்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆணையத்திடம் அளிப்பார் என்றும் தெரிவித்தார். ஜனவரி 8ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டபிறகு, ஆர்.கே.நகர் தொகுதி பிரச்னைகள் மட்டுமல்லாமல், தமிழகம் மற்றும் இந்திய அளவிலான பிரச்னைகள் பற்றி பேசவிருப்பதாகவும் கூறினார். “மத்திய அரசு மாநிலச் சுயாட்சிக்கு எதிராகச் செயல்படுகிறது. இஸ்லாமிய பெண்களுக்காக முத்தலாக் தடை சட்டத்தை அவசரமாகக் கொண்டுவருவதால், இந்தியா முழுவதுமுள்ள இஸ்லாமிய மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். மூன்றாண்டுகள் சிறை தண்டனையைச் செயல்படுத்தும் விதமாக, பொய் வழக்குகள் போட முடியும்; பிடிக்காதவர்களைப் பழிவாங்க இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும். அதனால் இஸ்லாமிய மக்களின் அமைப்புகளிடம் கருத்து கேட்டு, யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதேபோல கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்னைகளைப் பற்றி, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவையில் குரல் எழுப்புவேன். மத்திய அரசை கண்மூடித்தனமாக எதிர்ப்பது எனது சுபாவம் கிடையாது. தமிழகத்தின் கொள்கை, கலாசாரத்தை பாதிக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், அதை எதிர்ப்பது அம்மாவின் பண்பு. அந்த யுக்தியைத்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம்” என்றார் தினகரன். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோது, “ஆன்மிகம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பம். ஆன்மிகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாகப் போய் முடியும் என்பது எனது எண்ணம். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற நாடு. இந்தியாவில் பல்வேறு மதத்தினர் வசித்து வருகின்றனர். ஆன்மிகம் என்பது தனிநபர் தன்னை ஒழுங்குபடுத்த செய்துகொள்வது. அதை ஓர் இயக்கம் செய்யமுடியுமா என்று தெரியவில்லை” என்று கூறினார்.ஆர்.கே.நகரில் தினகரன் பெற்ற வெற்றி போலியானது என்று கூறியுள்ள திமுக, அதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவிருப்பதாகக் கூறியிருக்கிறது. இதுபற்றிய கேள்விக்கு, “ஆர்.கே.நகரில் திமுகவினர் அதீத நம்பிக்கையில் கோட்டைவிட்டிருக்கிறார்கள்” என்று பதில் தெரிவித்தார். அவரது தந்தைக்கு இந்தக் கணக்குகள் தெரியும். ஒவ்வொரு தேர்தலும், அவருக்கு ஓர் அமில சோதனை. 40 ஆண்டுகால அனுபவம் உள்ள இவர், எப்படி கோட்டைவிட்டார் என்று தெரியவில்லை. டெபாசிட் போனதால், அவர்களது கட்சியிலேயே அதிருப்தி உருவாகியிருக்கலாம். தோல்வியுற்றவர்கள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். அவர்கள் நீதிமன்றம் போனால், அதை நான் வரவேற்கிறேன். இப்போதாவது எனக்கு யாருடனும் கூட்டணி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிந்துகொள்ளட்டும். மக்களுடனும் தொண்டர்களுடனும்தான் எனது கூட்டணி. திமுகவோடு கூட்டணி வைக்கவேண்டிய அவசியம் இல்லை” என்று அவர் தெரிவித்தார். தமிழக மக்கள் ஒராண்டாக கவனித்து, ஆர்.கே.நகர் தொகுதியில் தீர்ப்பளித்திருக்கிறார்கள். மறுபடியும் தேர்தல் வரும்போது, அவர்கள் பதில் சொல்வார்கள். அதனால் எப்போது தேர்தல் வந்தாலும், மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்” என்றும் தெரிவித்தார் தினகரன்.

 • ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
 • TTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *