ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரை விமர்சனம்

Comments (0) சினிமா, விமர்சனம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரை விமர்சனம்

 • ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் 2
 • add-01
 • ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் 1
 • ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

நடிகர்  விஜய் சேதுபதி

நடிகை  நிகாரிகா கொனிதலா

இயக்குனர்  ஆறுமுக குமார்

இசைஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு ஸ்ரீ சரவணன்

காதல், பேய், அபத்த நகைச்சுவை எனச் சுற்றிவரும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது புதிய வகைமையில் படங்கள் உருவாவதும் நடந்தேறி வருகிறது. அந்த வகையில் தனது முதல் படத்தையே அட்வெஞ்சர் டிராமா ஜானரில் உருவாக்கியுள்ளார் ஆறுமுகக்குமார். விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹாரிகா, காயத்ரி, ரமேஷ் திலக், ராஜ்குமார், டேனியல் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை 7சி என்டர்டெய்ன்மென்ட், அம்மா நாராயணா புரொடக் ஷன் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன.

ஆந்திராவின் காட்டுப் பகுதியில் ஒரு குக்கிராமமே திருட்டுத் தொழிலை ஆத்மார்த்தமாகச் செய்து வருகிறது. சூது கவ்வும் படத்தில் நிபந்தனைகளுடன் கடத்தல் தொழிலில் ஈடுபடும் விஜய் சேதுபதி டீமைப் போலவே இந்த ஊரிலும் பெண்களை, குழந்தைகளைத் துன்புறுத்தக் கூடாது, கொலை செய்யக் கூடாது என வரைமுறை விதித்துத் திருட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றனர். எமனை தெய்வமாக வழிபடுகின்றனர்.

அம்மக்களின் தலைவியின் (விஜி சந்திரசேகர்) மகன் எமன் (விஜய் சேதுபதி) தனது நண்பர்களான நரசிம்மன் (ராஜ்குமார்), புருஷோத்தமனுடன் (ரமேஷ் திலக்) தொழிலுக்குச் செல்கிறார். அங்குச் சந்திக்கும் சௌம்யாவை (நிஹாரிகா) தங்களது கொள்கைகளை மீறிக் கடத்திவந்து திருமணம் செய்துகொள்ள முயல்கிறார் எமன்.

சௌம்யாவும் ஹரிஷும் (கௌதம் கார்த்திக்) கல்லூரிக் காதலர்கள் என்பதால் ஹரீஷ் தன் காதலியை மீட்கக் கிளம்புகிறார். எமன் சௌம்யாவை மணம்முடித்தாரா, ஹரிஷ் தனது நண்பன் சதீஷோடு (டேனியல்) இணைந்து காப்பாற்ற எடுக்கும் முயற்சி பலனளித்ததா என்பதை காமெடி தெறிக்கக் கூறுகிறது படம்.

ராமாயணத்திலிருந்து தற்போது உள்ள பல திரைப்படங்கள் வரை அதிகம் கேட்ட கதையின் சரடை விவரித்துக் கதை அமைத்திருந்தாலும் தான் தேர்ந்துகொண்ட ஜானரில் அதை அருமையாகப் பொருத்தித் திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர். கதையில் இடம்பெறும் அனைத்துக் கதாபாத்திரங்களும் தனித்துவமாகத் தெரிகின்றன. சூது கவ்வும் படத்தோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கச் சில இடங்கள் தூண்டுகின்றன.

வழக்கம்போலவே விஜய் சேதுபதி அநாயாசமாகத் தன் நடிப்பை வெளிப்படுத்துகிறார். மொக்கை வாங்குவது பற்றி எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் செல்லும் கௌதம் கார்த்திக் கதாபாத்திரம் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் சற்று அதிகப்படியாக இருந்தாலும் அவரது திரைப் பயணத்தில் இது குறிப்பிடத்தகுந்த படம்.

விஜய் சேதுபதியின் நண்பர்களாக வரும் ரமேஷ் திலக்கும் ராஜ்குமாரும் காமெடிக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். “ப்ரெண்டு… லவ் மேட்டரு… பீல் ஆயிட்டாப்ள… ஆஃப் சாப்பிட்டா கூல் ஆயிடுவாப்ள” என்று ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில் மனதில் நின்ற டேனியல், மொத்தப் படத்திலும் தனது நகைச்சுவையால் நிறைந்திருக்கிறார்.

அறிமுக நாயகி நிஹாரிகாவுக்கு நடிப்பதற்குச் சவாலான கதாபாத்திரம் இல்லையென்றாலும் தமிழில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்துள்ளது. குறைவான காட்சிகளில் வரும் காயத்ரி தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

நீண்ட வசனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் மூலம் உருவாக்கும் நகைச்சுவை, அபத்த நகைச்சுவை, சம்பவங்களினால் இயல்பாக உருவாகும் நகைச்சுவை, உடல்மொழி, வசன உச்சரிப்பினால் உருவாகும் நகைச்சுவை என அத்தனை முயற்சிகளையும் உபயோகித்துத் திரைக்கதை உருவாகியுள்ளது. இவை பல இடங்களில் அரங்கை அதிரச் செய்கின்றன. சில இடங்களில் சலிப்புத் தட்டவும் செய்கிறது. ரசிகர்கள் எந்த மனநிலையில் குறிப்பிட்ட காட்சியை உள்வாங்க வேண்டும் என்ற துல்லியமான புரிதல் உள்ள இயக்குநரால்தான் இந்த ஜானரைக் கையாள முடியும். கொஞ்சம் பிசகினாலும் உடனடியாக முகம்சுளிக்க வைக்கக்கூடிய ஆபத்து வாய்ந்த இந்தச் சவாலை அறிமுகப்படத்திலேயே ஆறுமுகக்குமார் திறம்படச் செய்துள்ளார். அவருக்கு இதில் பெரிதும் உதவியது ஜஸ்டின் பிரபாகரனின் இசைதான். சாதாரணக் காட்சிகளையும் தனது இசையால் நகைச்சுவைக் காட்சியாக மாற்றுகிறார்.

ராமன் நல்லவனா, ராவணன் நல்லவனா எனப் படத்தின் ப்ரோமோ வீடியோவில் விஜய் சேதுபதி பேசிய காட்சி படத்தில் இடம்பெறுகையில் குப்பன் சுப்பன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை அதே பெயரில் வந்திருந்தால் சர்ச்சை உருவாகி, அதற்காகவே படம் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

காட்சிகளின் நீளம், ஊரின் ரகசியம் எனச் சொல்லப்படும் அற்பமான காரணம், படம் முடியப்போகிறது என்பதற்காக விஜய் சேதுபதி கடைசி நேரத்தில் முடிவை மாற்றுவது எனச் சில உறுத்தல்களும் படத்தில் உள்ளன. படத்தின் இறுதியில் இரண்டாம் பாகம் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி உருவானால் இந்தப் படத்தில் சில இடங்களில் தவறவிட்ட சுவாரஸ்யத்தைக் கூட்ட முயற்சிக்கலாம்.

புதுவிதமான கதைகள், கதைக்களங்கள் மட்டுமல்லாமல் வெவ்வேறு வகைகளில் படங்கள் வரும்போது ரசிகர்களுக்கு விருந்தாக அமைவதோடு திரைத் துறையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அது வழிவகுக்கும் என்பதை ‘நல்ல நாள் பாத்து’ தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *