முருகன் கற்பனை கடவுள் அல்ல…சீமான் பரப்பரப்பு பேச்சு!

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

முருகன் கற்பனை கடவுள் அல்ல…சீமான் பரப்பரப்பு பேச்சு!

திருச்செந்தூர் தேரடி திடலில் நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி சார்பில், திருமுருக பெருவிழா பொதுக்கூட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் கலையரசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

பண்பாடு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்று சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் கூறினார். நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி சார்பில், குறிஞ்சி நில தலைவன், தமிழ் கடவுள், நமது முப்பாட்டன் திருமுருக பெருமான் குடிகொண்டுள்ள திருச்செந்தூரில் திருமுருக பெருவிழா நடைபெறுகிறது. முருகன் கற்பனை கடவுள் அல்ல, கற்பிக்கப்பட்ட கடவுளும் அல்ல. கொற்றவை பெருமாட்டியின் மகனாக பிறந்து வளர்ந்து, நம் இனத்தை காக்க போரிட்டு வாழ்ந்தவன். தமிழர்கள் உலகம் முழுவதும் தலைவனாக இருந்ததற்கு முருகனே சான்று.

அறத்தின் வழி நின்று வாழும் அனைவரும் அந்தணர்களே. முருகன் என்றால் அழகன் என்று பொருள். நம் முப்பாட்டனான முருகன் முறுக்கேறிய தசைகளை உடையவன். அதனால் அவனை முறுக்கன் என்று அழைத்தனர். நாளடைவில் அதுவே முருகனாக மாறியது. தமிழ் கடவுளான முருகப்பெருமானின் தைப்பூச திருவிழாவுக்கு தமிழகத்தில் விடுமுறை கிடையாது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும், தைப்பூசத்துக்கு கண்டிப்பாக விடுமுறை விடப்படும்.

இயற்கை மற்றும் முன்னோர்களை வழிபடுவது தமிழன் மரபு. வழிபாடு என்பதே முன்னோர்களின் வழியில் நடப்பது. தமிழர்களுக்கு சுடுகாடு கிடையாது. இடுகாட்டில் புதைப்பதுதான் வழக்கம். இருந்தால் தலைவன், இறந்தால் இறைவன். மனிதன், நல்ல மனிதன், மிக நல்ல மனிதன், இதன் தொடர்ச்சியே தெய்வம். மூத்தோரை போற்றுவதும் தமிழன் பண்பாடு. எனவேதான் நமது முப்பாட்டன் முருகனை வணங்க சொல்கிறேன். நமது இனத்தை மீட்டெடுக்கவே முருக வழிபாடு.

நமது முன்னோர்கள் காட்டிய வழிகள் அனைத்தும் பகுத்தறிவு சார்ந்தது. நமது வீட்டின் முன்பு கற்றாழை, தேங்காய், படிகாரம், சங்கு போன்றவற்றை கட்டி தொங்க விடுகிறோம். இயற்கை பேரிடர், போர் காலங்களில் கற்றாழை காயத்திற்கு மருந்தாகவும், உணவாகவும் பயன்பட்டது. ஆழி அலையால் தண்ணீர் கெட்டுபோனபோது, அதனை படிகாரத்தால் சுத்தப்படுத்தினர். அதேபோன்று உணவு கிடைக்காதபோது தேங்காயை உணவாகவும், நீராகவும் பயன்படுத்தினர். ஆழி அலையின் அழிவை நினைவுபடுத்தவே சங்கு தொங்க விடப்பட்டது. அதேபோன்று கோவில் கோபுர கலசத்தில் தினையை வைத்தனர். இதனால் இயற்கை பேரிடருக்கு பிறகு அதனை எடுத்து பயிரிட முடிந்தது. இவையெல்லாம் கடவுளின் பெயரில் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றவை.

கடவுள் இல்லை என்று பெரியார் வழியில் நாத்திகம் பேசியவன் நான். கடவுள் இல்லை என்பது பகுத்தறிவு இல்லை, முட்டாள்தனம் என்பதை 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது உணர்ந்துள்ளேன். கடவுள் இல்லை என்பவன் பகுத்தறிவாளன் என்பதே தவறு. முருகனுக்கு வேல் குத்துவது, காவடி எடுப்பது எல்லாம் பகுத்தறிவானதே. நமது முன்னோர்கள் வேட்டைக்கு சென்று, வேட்டையாடிய விலங்குகளை தோளில் தூக்கி வந்ததே காவடி. போரின்போது ஏற்படும் காயத்துக்கு அச்சப்படாமல் இருக்கவே வேல்குத்தும் பழக்கத்தை ஏற்படுத்தினர். இதனை கோவிலுக்கு செல்வதன் மூலம் பழக்கப்படுத்தினர். தமிழை வளர்த்த சிவனுக்கு இன்று தமிழில் அர்ச்சனை இல்லை. இந்த நிலையை மாற்ற நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.

முன்னதாக சீமான் தலைமையில், திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பிருந்து ஏராளமானவர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

நடிகர் மன்சூர் அலிகான், கவிஞர் அறிவுமதி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்நாதன் சேகுவாரா, வியனரசு, உஜ்ஜல்சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், தென்மண்டல செயலாளர் வக்கீல் சிவகுமார், வீர தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் வைகுண்டமாரி, தூத்துக்குடி மண்டல தலைவர் வெற்றிசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *