தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

குடிநீர் கேட்டு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள பெரியநாயகபுரம் கிராம மக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில்,எங்கள் பகுதியில் 700 குடும்பங்கள் உள்ளன. எங்கள் ஊர் கோரம்பள்ளம் பஞ்சாயத்தில் உள்ளது. பஞ்சாயத்து எழுத்தர் குடிநீரை திறந்து விடுவதில் பாரபட்சமாக செயல்படுகிறார்.எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் எங்களுக்கு குடிநீர் திறந்து விட வேண்டும் என்று கூறி இருந்தனர். கயத்தாறு தாலுகா ஓனமாக்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 1,600 பேர் வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊருக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் ஆலமரத்து ஊருணி உள்ளது. இந்த ஊருணியில் மழை காலங்களில் வரும் தண்ணீர் மூலம் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்படும்.

மேலும் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.50 ஆண்டுக்கு மேலாக ஊருணியில் எந்தவித மராமத்து பணியும் நடைபெறாத நிலையில் அந்த ஊருணியை தூர்வாரி படிக்கட்டு அமைக்க ஊர்மக்கள் சார்பில் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் ஊருணியை மேம்பாடு செய்ய விடாமல் தடுத்து வருகிறார். எனவே மாவட்ட நிர்வாகம் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஊருணியை தூர்வார வேண்டும் என்று கூறி இருந்தனர்.

அருகே உள்ள மேல தட்டப்பாறை பொதுமக்கள் கொடுத்த மனுவில், தூத்துக்குடி தாலுகாவில் மேல தட்டப்பாறை, கீழ தட்டப்பாறை மற்றும் உமரிக்கோட்டை கிராமங்களில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலை அமைக்க இடம் வாங்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த இடத்துக்கு செல்ல சரியான பாதை இல்லாததால், மற்றவர்களின் விவசாய இடத்தில் உரிய அனுமதி பெறாமல் பாதை அமைத்து வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் அந்த தனியார் நிறுவனம் எங்கள் பகுதியில் காற்றாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

காயல்பட்டினம் ஜெயலலிதா பேரவையை சேர்ந்த ஜமால் என்பவர் கொடுத்த மனுவில், காயல்பட்டினம் நகராட்சி 15-வது வார்டு பகுதியில் சிவன்கோவில் தெருவில் இருந்து உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெரு வரை தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *