சென்னை கே.கே. நகரில் கல்லூரி மாணவி கொலை: காரணம் என்ன?

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னை, மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வந்தவர் அஸ்வினி. இன்று வழக்கம்போல் அஸ்வினி கல்லூரி முடிந்து வெளியே வந்த போது, அழகேசன் என்ற இளைஞர் மாணவியை கத்தியால் குத்தினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அஸ்வினியை மீட்ட பொதுமக்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் மாணவி அஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, மாணவியைக் குத்திவிட்டு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோட முயன்ற போது, பொதுமக்கள் அவரைப் பிடித்து கை, கால்களை கட்டிவைத்து உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் தாக்கியதால் பலத்த காயம் அடைந்த அழகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞரிடம் கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். கல்லூரி வாசலிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

மதுரவாயல் தனலட்சுமி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகள் அஸ்வினி. மீனாட்சி கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். அதே பகுதியில் அழகேசனும் வசித்து வந்துள்ளார். சென்னை மாநகராட்சி ஊழியரான அவர் மலேரியா பிரிவில் கொசு மருந்து அடிக்கும் பணி செய்பவர். ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி, பின்னர் அது காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அஸ்வினியைக் கல்லூரிக்கு அழகேசனே அழைத்து வந்து விட்டுச்செல்வாராம். நாளடைவில் அழகேசனின் நடத்தை சரியில்லாத காரணத்தால் அஸ்வினி அவரை விட்டு விலகி விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த அழகேசன் அஸ்வினியை சந்தித்து பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனாலும் அஸ்வினி அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அஸ்வினி தன்னை விட்டு விலகிப் போய்விடக்கூடாது என்று, அவர் வீட்டுக்கே சென்று கட்டாயத் தாலி கட்டியுள்ளார் அழகேசன்.

இதுபற்றி அஸ்வினியின் பெற்றோர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் அழகேசன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அழகேசனின் தொல்லை தாங்க முடியாமல் அஸ்வினி ஜாபர்கான் பேட்டையில் உள்ள உறவினர் இல்லத்தில் தங்கி, அங்கிருந்து கல்லூரிக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் அழகேசன் தொல்லை காரணமாகக் கடந்த ஒருவாரமாக அஸ்வினி கல்லூரிக்கு வரவில்லை. நேற்று முதல் மீண்டும் கல்லூரிக்கு வந்த நிலையில் தனக்கு கிடைக்காத அஸ்வினி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் திட்டமிட்டு கத்தியுடன் அந்தப் பகுதியில் வந்து காத்திருந்தார் அழகேசன்.

கல்லூரியை விட்டு மாணவி வெளியே வந்தவுடன் அவரை வழிமறித்து தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் தனக்கு அந்த எண்ணமில்லை, தான் படிக்க வேண்டும் என்று கூறிய அஸ்வினி தனது வாழ்க்கையில் இனி குறுக்கிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த அழகேசன் அஸ்வினியை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். அதனால் படுகாயமடைந்த அஸ்வினி மரணமடைந்தார். தற்போது அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை குறித்து எழும்பூர் வட்டாட்சியர் விசாரணைக்கு ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

மகளிர் தினமான நேற்று பெண்களுக்கு பாதுகாப்பும், முக்கியத்துவமும் கொடுக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறியிருந்த நிலையில் இன்று இந்தச் சம்பவம் நடந்தது பெண்களின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *