குரங்கணி காட்டுத் தீ : 9 பேர் உயிரிழப்பு !

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி சென்னை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 6 பெண்கள், , ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த 12 பேர், சென்னையைச் சேர்ந்த 24 பேர் என மொத்தம் 36 பேர் கொண்ட குழு ஒன்று போடி அருகே குரங்கணி, கொலுக்கு மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றனர். மலையேறச் சென்றிருந்த நிலையில் அங்கு பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தில் அனைவரும் சிக்கியுள்ளதாக வெளியான தகவலையடுத்து மத்திய, மாநில அரசு உதவிகளுடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. மலைப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் எனப் பலரும் மீட்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு முதல் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. தற்போது வரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் காயமின்றி மீட்கப்பட்டனர். 17 பேர் காயங்களுடன் தேனி மற்றும் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பெண்கள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி தெரிவித்துள்ளார்.

மதுரையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள்

அனுவித்யா, கண்ணன், நிஷா, தேவி, கேரளாவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, மீனா, தஞ்சையைச் சேர்ந்த சாய் வசுமதி ராஜாஜி அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையைச் சேர்ந்த ஸ்வேதா, பார்கவி, திவ்ய பிரக்ருதி ஆகியோர் மதுரையில் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் நிறைவடைந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில்வைக்கப்பட்டுள்ளன.

 • காட்டுத் தீ
 • குரங்கணி காட்டுத் தீ
 • காட்டுத் தீ 1

சென்னையைச் சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா , விவேக் , தமிழ்ச் செல்வி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மலையேறும் பயிற்சிக்குச் சென்றவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனைக்குச் சென்றவண்ணம் உள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்குச் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திலிருந்து தப்பிக்க முயன்றபோது பள்ளத்தாக்குகளுக்குள் சிக்கி 9 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து விவரம் அறிய 9445000586, 9994793321 என்ற தகவல் மைய எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

36 பேரையும் மலைக்கு அழைத்துச் சென்ற வழிகாட்டி ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்த மலையேற்றத்தை ஏற்பாடு செய்தது சென்னை டிரக்கிங் கிளப் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் 40,000 உறுப்பினர்கள் இருப்பதாக இந்த அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஏற்பாட்டாளர்கள், பொறுப்பாளர்கள் விவரம்,தொலைபேசி எண் என எதுவும் இடம் பெறவில்லை. இவர்கள் மேற்கொள்ளும் மலையேற்றப் பயணங்கள் முறையாக அனுமதி பெறப்பட்டவையா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *