2019 நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டி – விஜயகாந்த் அறிவிப்பு

Comments (0) Uncategorized, அரசியல், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பிறந்தநாள் அக்கட்சியினரால் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில், நாளை அவருடைய 66வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது.

இதுகுறித்து விஜயகாந்த் இன்று (ஆகஸ்ட் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், “2005ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு, 2006-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை ‘வறுமை ஒழிப்பு தினமாக’க் கடைப்பிடித்துவருகிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் என் வழியைப் பின்பற்றி, அவர்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கான நல உதவிகளை “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற கொள்கை முழக்கத்தோடு, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறார்கள். இதன்மூலம், தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க தொடர்ந்து பாடுபட்டுவருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிறந்தநாட்களின் போது தேமுதிக சார்பில் வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டுள்ள விஜயகாந்த், “ அரசியல் என்பது பொதுநலமாக இருக்க வேண்டுமே தவிர, எல்லாத் துறைகளிலும் தலையீடு இருக்கக் கூடாது. லஞ்சத்தையும், ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் அரசியல் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஆட்சியாளர்கள், தங்கள் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதில் குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதில்லை. இவற்றையெல்லாம் எதிர்காலத்தில் தீர்க்கவேண்டிய முயற்சியில் தே.மு.தி.க தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். ஒரு நல்ல எதிர்காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அமைய நான் உறுதிபூண்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் இறுதியாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று, மக்களுக்கு உதவிகள் செய்திட அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ள அவர், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது, எனக்காக உடல் நலம் வேண்டி சாதி, மதம் பார்க்காமல் ஆலயங்களிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும் பிரார்த்தனை செய்த “என் உயிரிலும் மேலான எனது அன்புத் தொண்டர்களுக்கும், தமிழ் நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை ஆரம்பித்த விஜயகாந்த், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றிபெற்றார். மக்களுடனும் தெய்வத்துடனும்தான் கூட்டணி என்று கூறிவந்த விஜயகாந்த், 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார்.

அதன்பிறகு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடனும், 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடும் இணைந்து தேர்தலை சந்தித்தார். தற்போது திமுகவுடன் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட 9 கட்சிகள் கூட்டணியாக உள்ளன. இந்த சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *