தன்னை சாதி கடந்தவராக முன்னிறுத்திக்கொள்ளும் தினகரன்

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தன்னை சாதி கடந்தவராக முன்னிறுத்திக்கொள்ளும் முயற்சியில் தனது கட்சி நிர்வாகியையே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

டிடிவி தினகரன் மீது முக்குலத்தோர் சாதி முத்திரை தொடர்ந்து குத்தப்பட்டுவருகிறது. அவரது பொதுக்கூட்டங்களுக்குக் கட்சிகளைக் கடந்து முக்குலத்து மக்கள் சமுதாயப் பற்றின் காரணமாக வருகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி பரமக்குடியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் முக்கிய தலைவரான இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு தினகரன் பரமக்குடி சென்று அஞ்சலி செலுத்துகிறார் என்று அறிவிக்கப்பட்டது.
இது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. டிடிவி தினகரன் கடந்த வாரம் தனது ஆதரவாளர்களோடு நடத்திய ஆலோசனையின்போது, ‘’நம்மைக் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் பிரதிநிதியாக அடையாளப்படுத்திவிடக் கூடாது. நாம் எல்லாருக்கும் பொதுவானவர்களாகவே அறியப்பட வேண்டும். பதவியே போனாலும் பரவாயில்லை என்று என்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் என் சமுதாயத்தில் இருந்தே எதிர்ப்பு வந்தாலும் பரவாயில்லை நான் பரமக்குடி சென்று இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவேன்’’ என்று கூறியிருக்கிறார். அதன்படியே அறிவிப்பு வெளியிடப்பட்டதும், மதுரை மாநகர் வடக்கு மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சூரன் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டார். ‘‘உசிலம்பட்டி மூக்கையாத் தேவர் நினைவிடத்திற்கு வராத டிடிவி தினகரனை மூக்கையாத் தேவரை நேசிக்கும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். மூக்கையாத் தேவரைவிட இமானுவேல் பெரிய தலைவரா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார் அவர். அமமுகவில் இருந்துகொண்டே இப்படி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாகவும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான தினகரனையே எதிர்த்தும் அவர் பதிவிட்டது தினகரன் கவனத்துக்குச் சென்றது. மேலும் சூரன் தொடர்ந்து தேவரின சிறப்புச் செய்திகள் என்ற பெயரில் சாதிப் பெருமிதம் பேசிவருவதாகவும் தினகரனிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று சூரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார் டிடிவி தினகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *