முதல்வருடன் மோதும் விஜயபாஸ்கர்

Comments (0) அரசியல்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

குட்கா விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வரிடம் நேரடியாக மோதியிருப்பதாகத் தெரிகிறது.

குட்கா விவகாரம் குறித்த சிபிஐ ரெய்டைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமைச்சர் விஜயபாஸ்கரையும் டிஜிபியையும் பதவிநீக்கம் செய்ய வேண்டும் அல்லது அவர்களே ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்திக் குரல் கொடுத்துவருகிறார்கள்.பணியிலிருக்கும் டிஜிபி வீட்டில் சிபிஐ ரெய்டு செய்தது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத சம்பவம் என்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள். அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் சிபிஐ கைது செய்யப்படலாம் என்றும் ஐ.பி.எஸ். போஸ்டிங் ஆர்டர் குடியரசுத்தலைவரால், வழங்கப்பட்டிருப்பதால் டிஜிபி டி.கே.இராஜேந்திரனை கைது செய்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் பேச்சு உலவிக் கொண்டிருக்கிறது.

டி.கே.ராஜேந்திரன் கடந்த 2017 ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியும் தமிழ்நாடு போலீஸ் சட்டக் கூறுகளின்படியும், ஓய்வு நாளில் இருந்து இரு வருட பணி நீட்டிப்பில் அவர் டிஜிபி ஆக்கப்பட்டார். அவர் 2019 ஜூன் 30ம் தேதி வரை – பணியில் இருக்கலாம். ஆனால், முதல்வரை சந்தித்த பின்னர் இதுகுறித்து தனது நண்பர்களிடம் தீவிரமாக ஆலோசித்த டிஜிபி டி.கே. ராஜேந்திரன், “பணி நீட்டிப்பில் இருக்கும் நான் வி.ஆர்.எஸ். (விருப்ப ஓய்வு) கொடுத்துவிட்டால் என்ன?’’ என்று கேட்டுவருகிறாராம். இதற்கிடையே அமைச்சர் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் போன்ற அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், “அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துவிட்டால் பிரச்சனை பாதி தீர்ந்துவிடும். இல்லையென்றால் ரெய்டு தொடரும்” என்று கூறியுள்ளார்கள். ஆனால் முதல்வர் எதுவும் முடிவெடுக்கவில்லையாம். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் விஜயபாஸ்கர் ராஜினாமாவை விரும்புவதாக ஒரு தகவல் விஜயபாஸ்கருக்குக் கிடைத்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடும் எதிர் எதிரில்தான் உள்ளது தனக்கு எதிராக அமைச்சர்கள் முதல்வரிடம் பேசியதை அறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பிற்பகல் எடப்பாடி வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது முதல்வரிடம், “என்னை ராஜினாமா செய்ய வைக்க சில அமைச்சர்கள் முயலுகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். வெளிப்படையாகவே கேட்கிறேன். உங்கள் சமூகத்தை சேர்ந்த அமைச்சராக இருந்தால் ராஜினாமா செய்யச் சொல்வீர்களா? ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற சம்பவத்தில் அனைத்து அமைச்சர்கள் பெயர்களும் உள்ளன. அதற்காக எல்லா அமைச்சர்களும் ராஜினாமா செய்துவிட முடியுமா?” என்று கேட்டதாகத் தெரிகிறது.
“உச்ச நீதிமன்றத்தில் எனக்குத் தெரிந்த மூத்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். நான் வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்துக்கொள்கிறேன். இதற்கு மேல் என்னை யாராவது வலியுறுத்தினால் நான் வேறு மாதிரியாக செய்ய வேண்டியதிருக்கும்” என்று காரசாரமாகப் பேசிவிட்டு வெளியேறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *