புதுச்சேரி, தமிழகம் : மறியல், முழுஅடைப்பு!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்த நிலையில், இதனைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டத்திற்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தேசிய அளவிலும் தமிழக அளவிலும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும், விவசாய இயக்கங்களும் ஆதரவு தெரிவித்தன. அதன்படி இன்று (செப்டம்பர் 10) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாரத் பந்த் நடைபெற்றுவருகிறது. பெட்ரோல், டீசல் விலையை உடனே குறைக்க வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் தொமுச, சிஐடியூ, ஏஐடியுசி ஆகியவற்றின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது ‘மத்திய அரசே, மோடி அரசே கட்டுப்படுத்து, கட்டுப்படுத்து பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்து’ என கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், “பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் பெட்ரோல் மீதான வரியை உயர்த்தியதன் காரணமாகவும், மாநில அரசின் வரிகள் காரணமாகவும் பெட்ரோல்,டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மத்திய அரசின் வரியைக் குறைத்தாலே இந்த விலை உயர்வை நிச்சயமாகக் குறைக்க முடியும். ஆனால் குறைக்காமல் தொடர்ந்து விலையேற்றம் செய்துகொண்டுள்ளனர். தற்போது நடக்கக்கூடிய போராட்டத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும். இல்லையெனில் போராட்டங்கள் தீவிரமடையும். மக்களுக்கு நல்லது செய்வதாய் தெரிவிக்கும் மோடி அரசு, மக்களின் வயிற்றில் அடித்து, விரல் விட்டு எண்ணக் கூடிய கார்பரேட் நிறுவனங்களில் நலன்களைக் காக்கக்கூடிய அரசாகத்தான் செயல்பட்டுவருகிறது” என்று தெரிவித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “உள்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 81 ரூபாய்க்கு விற்கும் மோடி அரசு, வெளிநாட்டுக்கு வெறும் 38 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிற மோசமான நிலையைக் கடைபிடித்துவருகிறது” என்று குற்றம் சாட்டினார். போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல் துறையினர் கைது செய்தனர். திருச்சி காந்தி மார்கெட் முன்பு இடதுசாரி கட்சிகள் நடத்திய மறியல் போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விலை உயர்வை கண்டித்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்திய 500 பேர் கைது செய்யப்பட்டனர். விலை உயர்வுக்கு எதிராக விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பாரத் பந்த் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய்ப் பட்டணம், குளச்சல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தக்கலை அருகே காட்டாத்துறையில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசித் தாக்கியதில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைந்தது. திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கவில்லை. இதுபோலவே தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. சென்னையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று காலை 6 மணி முதல் புதுச்சேரி மாநிலத்தில் அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூரிலிருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் பேருந்துகள் அனைத்தும், விழுப்புரம் வழியாக சென்னைக்கு மாற்றிவிடப்பட்டுள்ளன. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *