தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஐதராபாத் மற்றும் கோடான்காலில் ரேவந்த் ரெட்டி மற்றும் அவருடைய உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலையில் இருந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 15 இடங்களில் சோதனை நடப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. தெலுங்கானாவில் அரசு கலைக்கப்பட்டதை அடுத்து விரைவில் தேர்தல் நடைபெறலாம் என அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. கோடான்காலில் ரேவந்த் ரெட்டி பிரசாரம் மேற்கொண்ட போதுதான் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னை துன்புறுத்த மாநில மற்றும் மத்திய அரசுக்கள் திட்டமிட்டுள்ளன, விரைவில் எனக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படலாம், பழைய வழக்குகளை எனக்கு எதிராக திருப்பலாம் என கூறினார். மேலும் தெலுங்கானா டிஜிபி மகேந்திர ரெட்டி, சந்திரசேகர் ராவ் கையாள் போன்று செயல்படுகிறார் எனவும் விமர்சனம் செய்து இருந்தார். ரேவந்த் ரெட்டியின் சகோதரருக்கு சொந்தமான உள்கட்டமைப்பு நிறுவனத்தில் உள்ள முறைகேடான நிதி விவகாரத்தில் இந்த சோதனை நடைபெறுகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற எம்எல்சி தேர்தலின்போது எம்எல்ஏ ஒருவருக்கு வாக்களிக்கப் பணம் கொடுத்ததாக ரேவந்த் ரெட்டியை தெலுங்கான ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தெலுங்கானா மாநிலம் தெலுங்கு சேதம் கட்சியின் தலைவராக இருந்த அவர் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். அதிலிருந்து தெலுங்கானா அரசை கடுமையாக விமர்சனமும் செய்து வந்தார். இப்போது பணம் சிக்கியது தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற டிஜிபிக்கு, ஊழல் தடுப்பு பிரிவு கடிதம் எழுதியுள்ளது. டிஜிபி, வருமான வரித்துறை உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளார். இதையடுத்து சோதனை நடந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கையால் எங்களை பணிய செய்ய முடியாது என தெலுங்கு தேசமும், காங்கிரசும் கூறியுள்ளது. தெலுங்கானாவில் வரவிருக்கும் தேர்தலில் தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது.