ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு அரசுகள் உதவுவது அதிர்ச்சியை அளிக்கிறது – தொல்.திருமாவளவன்

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மத்திய-மாநில அரசுகள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு உதவுவது அதிர்ச்சியை அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) பயங்கரவாதத்தை எதிர்த்து ‘தேசம் காப்போம் மாநாடு‘ நடத்த திட்டமிட்டு உள்ளோம். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இடதுசாரிகள் கட்சி தேசிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து உள்ளோம். இந்தியாவை சூழ்ந்து உள்ள பயங்கரவாத ஆபத்தில் இருந்து நாட்டையும், மக்களையும், ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஆகவே மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு அழைத்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்று கூறி இருந்தேன். ஆனால் அவர்கள் அழைக்கவில்லை. அழைக்காமலேயே நெருங்கி வருகிறோம் என்று கூறுகிறார்கள். அது வியப்பாக உள்ளது. டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேதாந்தா நிறுவனத்துக்கும் அனுமதி அளிக்கப்போவதாக தகவல்கள் வந்து உள்ளன. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை பகைத்து கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதன் மூலம் தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை இயங்க செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏதுவான சூழலை உருவாக்கி வருவதாக தெரிகிறது. தமிழக அரசு பிறப்பித்து உள்ள ஆணை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு வலிமையான ஆணையாக இல்லை. இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் புதிதாக ஆய்வு செய்வதற்கு குழு அமைக்க முடிந்து உள்ளது. மத்திய, மாநில அரசு, தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு உதவி செய்யும் வகையில் சேர்ந்து செயல்படுவது ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க வேண்டும். கண்துடைப்புக்கு என்று இல்லாமல், உண்மையில் அந்த குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் உரிய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். செங்கோட்டையில் பாதிக் கப்பட்டவர்கள் இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் தாக்கியவர்கள் மீதும், பாதிக்கப்பட்டவர்கள் மீதும் ஒரே விதமான நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது.

என்று திருமாவளவன் கூறினார்.

தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், திருச்செந்தூர் அருகே உள்ள நா.முத்தையாபுரம், எல்லப்பநாயக்கன் குளத்தில் பனைமர விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர்கள் தமிழினியன், சேனா ஐக்கோர்ட் பாண்டியன், திருச்செந்தூர் தொகுதி செயலர் தமிழ்குட்டி, ஒன்றிய செயலாளர் சங்க தமிழன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பனைமர விதைகளை விதைத்து, விழாவினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பரமன்குறிச்சி சாலையில் உள்ள அய்யா வைகுண்டர் சந்தன வனத்திலும் பனைமர விதைகளை விதைத்தார். நிகழ்ச்சியின் போது, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பாலபிரஜாதிபதி அடிகளார், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குள் 1 கோடி பனை விதைகளை விதைக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்செந்தூர் வட்டாரத்தில் இன்று பல இடங்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டு உள்ளன. பனை மரம் தமிழர்களின் பாரம்பரிய அடையாளம். அய்யா வைகுண்டரின் கருத்துகள் நீண்ட காலமாக பாலபிரஜாதிபதி அடிகளார் தலைமையில் பரப்பப்பட்டு வருகிறது. தமிழக அரசு வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களின் பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும். வைகுண்டரின் வழிபாட்டு தலங்கள் அரசின் அறநிலையத்துறையுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்.

என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *