திருச்செந்தூரில் நேற்று பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் கிறிஸ்தவ ஆலய கொடிமரம் சேதம் அடைந்தது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் நேற்று அநேக இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இந்த நிலையில் திருச்செந்தூரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. காலை 8 மணி அளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் இடைவிடாது தொடர்ந்து பெய்த பலத்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதனால் பள்ளிக்கூடங்களுக்கு மாணவ–மாணவிகள் குடை பிடித்தவாறு சிரமத்துடன் சென்றனர். சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் பலத்த மழை பெய்ததால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு சென்றன. மதியம் வரை சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மிதமான மழை விட்டு விட்டு பெய்தது.
திருச்செந்தூர் மேல ரத வீதி, தெற்கு ரத வீதி, கீழ ரத வீதி, அமலிநகர் சந்திப்பு, சிவன் கோவில் முன்பு பந்தல் மண்டப வளாகம், பகத்சிங் பஸ் நிலையம், தினசரி மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போன்று தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
பலத்த மழையின்போது திருச்செந்தூர் அமலிநகர் கிறிஸ்தவ ஆலய கொடிமரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் கொடிமரத்தின் மீதுள்ள சிலுவை துண்டிக்கப்பட்டு தனியாக கீழே விழுந்தது. திருச்செந்தூரில் காலையில் சுமார் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பின்னர் பகலிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. பகலில் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது. ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, உடன்குடி, மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் காலையில் பலத்த மழை பெய்தது.