சென்னை மற்றும் கோவையில் ரேவதி, லோட்டஸ் உள்பட பல்வேறு குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை பெரம்பூரில் இயங்கி வரும் ரேவதி குழும நிறுவனங்களான ரேவதி நகைக்கடை, ரேவதி சூப்பர் மார்க்கெட், ரேவதி பர்னிச்சர் மற்றும் பாத்திரக்கடை, ரேவதி துணிக்கடை ஆகியவற்றில், இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.வரி ஏய்ப்பு புகாரின் பேரில், லோட்டஸ் குழுமம் மற்றும் ஜி ஸ்கொயர் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வரும் வருமான வரித்துறை அதிகாரிகள், சிறு சிறு நிறுவனங்கள் உள்பட சென்னையில் மட்டும் மொத்தம் 72 இடங்களில் ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.சென்னையில் உள்ள மிகப்பிரபலமான நிறுவனத்துடன் வணிகத் தொடர்பு வைத்துள்ள சிறு சிறு நிறுவனங்கள், கணக்கேடுகளை முறையாக பராமரிக்கவில்லை என்றும், லாபத்தை சரியாக காட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் எழுந்த புகாரை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் மட்டும் சுமார் 350 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், கோவையிலும் 2 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.