பாஜக வேட்பாளர்கள் 184 பேரில் 35 பேர் மீது குற்ற வழக்குகள்!

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பாஜக அறிவித்துள்ள வேட்பாளர்களில் 35 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

மக்களவைத் தேர்தல் நடைபெற ஒரு சில வாரங்களே உள்ளன. தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. அந்த வகையில் நேற்று பாஜக 184 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் 184 பேரில் 19 சதவிகிதம், அதாவது 35 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை ஆய்வு செய்யும் myneta.info எனும் வலைதளத்தின் மூலம் இத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

184 பேரில் 78 பேர் 2014ல் போட்டியிட்டவர்கள் ஆவர். அவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஆராய்ந்ததில் இந்த விவரங்கள் தெரியவந்திருக்கின்றன.

தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி, 11 குற்ற வழக்குகள் பதிவுகளுடன் மகாராஷ்டிரா சந்திரப்பூர் தொகுதியில் போட்டியிடும், வேட்பாளர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அகிர் முதலிடத்தில் இருக்கிறார். ஒடிசா மாநிலம் பால சோர் தொகுதி வேட்பாளர் பிரதாப் சாரங்கி மீது 10 குற்ற வழக்குகள் உள்ளன. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேரும் இதில் இடம் பெற்றுள்ளது. அவர் மீது 5 குற்ற வழக்குகள் உள்ளன.

மீதமுள்ள 106 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பட்சத்திலும், பாஜக அடுத்தகட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடும் பட்சத்திலும், குற்ற வழக்குகள் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அரசியலில் குற்றப்பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதைத் தடுப்பதற்குத் தேர்தலில் போட்டியிட அவர்களுக்குத் தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைச் சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், ”தேர்தல் சமயங்களில்,போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை ஊடகங்களில் தெரியப்படுத்த வேண்டும், அதன்பின்னர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்து கொள்வார்கள்” என்று தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *