ஓ.பன்னீர் மகனை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன்

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 22) காலை வெளியிட்டிருக்கிறார் டிடிவி தினகரன்.

முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 17 ஆம் தேதி வெளியிட்ட தினகரன் அதில் 24 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். மத்திய சென்னை தொகுதியில் அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ வேட்பாளரை நிறுத்துகிறது. ஆக, 25 போக மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார் தினகரன்.

இதில் தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இவர் அதிமுக சார்பில் போட்டியிடும், ஓ.பன்னீரின் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்துக் களமிறங்குகிறார்.

தேனி தொகுதியில் யாரை நிறுத்துவது என்று தொடர்ந்து யோசித்து வந்தார் தினகரன். ஒரு கட்டத்தில் தினகரன் மனைவி அனுராதாவே நிற்கலாம் என்ற பேச்சுகளும் எழுந்தன. ஆனால் ஓ.பன்னீரை எதிர்த்து குடும்ப அரசியல் என்ற பிரச்சாரத்தை முன் வைக்க முடியாமல் போய்விடும் என்பதால் தன் மனைவியை நிறுத்தும் முடிவைக் கைவிட்டார் தினகரன். மேலும் விவேக் கூட அங்கே நிறுத்தப்படலாம் என்ற பேச்சும் எழுந்தது. அதையும் தினகரன் விரும்பவில்லை.

தமிழகத்தில் எந்தத் தொகுதியில் எப்படி போனாலும் தேனியில் ஓ.பன்னீர் மகனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார். அதனால், ஓ.பன்னீர் குடும்பத்தை எதிர்த்து வலுவாக பிரசாரம் செய்யவும், சமாளிக்கவும் தங்க தமிழ் செல்வனே சரி என்ற முடிவுக்கு கடைசியாய் வந்திருக்கிறார் தினகரன். இந்தப் பட்டியலில் கடைசியில் சேர்க்கப்பட்ட பெயர் தங்க தமிழ்செல்வன் என்கிறார்கள் அமமுக வட்டாரத்தில்.

இதுவரை தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளுக்கும் அமமுக கூட்டணி வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில் மீதமிருக்கும் புதுச்சேரியில் போட்டியிடலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் தினகரன். மேலும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான இரண்டாவது பட்டியலில் ஓசூர் மட்டும் விடுபட்டிருக்கிறது.

தங்க தமிழ்ச்செல்வனின் ஆண்டிபட்டி தொகுதியில் அமமுக ஒன்றிய செயலாளரான ஜெயக்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும் தர்மபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாப்பிரெட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பழனியப்பனை நிறுத்தியிருக்கிறார் தினகரன். எனவே பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மாசெ. ராஜேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *