தாமதமாக வந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மக்களவைத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய தாமதமாக வந்ததால் பெரம்பலூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. 21 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை மார்ச் 24ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் கமல்ஹாசன் வெளியிட்டார்.

இரண்டாவது பட்டியலில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் வி.அருள்பிரகாசம் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் மாற்றப்பட்டு செந்தில்குமார் என்பவர் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்

வேட்பாளர்கள் தங்கள் மனுவை இன்று மதியம் 3 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், பெரம்பலூர் தொகுதி மநீம வேட்பாளர் செந்தில்குமார் தாமதமாக வந்துள்ளார். இதனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

3 மணிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில் செந்தில்குமார் 3.20 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். இதனால் அவரை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்துள்ளனர். போலீசாருடன் நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் தாமதமாக வந்ததாகவும், விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை எனவும் கூறி அவரது வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரி சாந்தா ஏற்க மறுத்திருக்கிறார். காலையில் 11 மணிக்கே வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கான விண்ணப்ப படிவத்தைத் தனது ஆதரவாளர்கள் வாங்கிவிட்டனர். இன்று காலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், ஒரு சில வங்கிக் கணக்கு விவரங்களைச் சரிபார்த்து முறையாக எடுத்து வருவதற்குக் காலதாமதம் ஏற்பட்டதாக வேட்பாளர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. எனினும் அவரது மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *