திருவண்ணாமலை அரசுப் பேருந்தில் கிடந்த 3½ கோடி ரூபாய்!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்து மூன்றரை கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர் தேர்தல் பறக்கும் படையினர்.

தமிழகத்திலுள்ள மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அப்பகுதியில் தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (ஏப்ரல் 3) அரூர் அருகேயுள்ள பையர்நாயக்கன்பட்டி கூட் ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையிலிருந்து அரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பேருந்து இருக்கைகளுக்கு அடியில் கிடந்த 7 பைகளில் கட்டுக்கட்டாக 200 ரூபாய், 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்தப் பைகள் தொடர்பாகப் பேருந்தில் இருந்த செல்வராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தனக்கும் இந்தப் பணத்துக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று கூறியதையடுத்து, அவரைத் தேர்தல் பறக்கும் படையினர் விடுவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பணம் பின்னர், அரூர் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு மூன்றரைக் கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. இந்தப் பணம் அரசு கருவூலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு விநியோக்கும் வகையில், அரசுப் பேருந்தில் பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பணம் இருந்த ஒரு பையொன்றில் ரமேஷ் என்பவரது பெயரில் இருந்த பாரத ஸ்டேட் வங்கிக் கணக்கு புத்தகம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதையொட்டியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *