சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் தடை மக்கள் விரோத அதிமுக-பாஜக கூட்டணிக்கு கிடைத்த முதல் தோல்வி – எஸ்.டி.பி.ஐ.

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக, எட்டு வழி பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய-மாநில அரசுகள் திட்டத்தை அறிவிப்பு செய்தன. இந்த திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன.
ஆனால், இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாத தமிழக அரசு, சுமார் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த கடந்த ஆண்டில் அரசாணை வெளியிட்டது. பொதுமக்கள், விவசாயிகளின் எதிர்ப்புகளையும் மீறி காவல்துறை அடக்குமுறையுடன் நில அளவீடு பணிகளைத் தொடங்கி கல் நடும் பணிகளை மேற்கொண்டது.
விவசாயிகள், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதால் தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஆர்.சுந்தரராஜன் உள்ளிட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக கூறி நிலங்களை கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தது. 
இந்நிலையில் வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே முடிவுற்ற நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்.08) வழங்கிய தீர்ப்பில், நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி அமர்வு அளித்த அந்த உத்தரவில், பொதுமக்களிடம் எந்தக் கருத்தும் கேட்கவில்லை. நில அளவு சட்டத்தை முழுமையாகப் பின்பற்றவில்லை. இத்திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் ஆணையத்தின் ஒப்புதலும் பெறவில்லை என்பதையெல்லாம் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்வதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. விவசாயத்தை காக்க வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணத்தை இந்த தீர்ப்பு பிரதிபலிக்கிறது. தமிழக அரசு இந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த தீர்ப்பை அதிமுக கூட்டணியை சேர்ந்த பாமக வரவேற்கும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி தீர்ப்பை எதிர்த்தும், அதனுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சி தீர்ப்பை ஆதரித்தும் பேசுவது தமிழக மக்களை ஏமாற்றுவது போல தெரிகிறது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதிமுக-பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ள முதல் தோல்வியாகும். மக்கள் விரோத அதிமுக-பாஜக அரசுகளுக்கு இதுபோன்ற தோல்விகளை மக்கள் தேர்தலில் அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *